வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (02/01/2019)

கடைசி தொடர்பு:17:30 (02/01/2019)

`உனக்கு யார் செல்போன் கொடுத்தது?’ - பெற்ற மகளையே தீயிட்டுக் கொளுத்திய தந்தை

கண்டித்தும் கேட்காமல் தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்த மகளைத் தந்தையே தீயிட்டுக் கொளுத்திய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

மும்பையின் விரார் பகுதியைச் சேர்ந்தவர் முகமது மன்சூரி. இவருக்கு 16 வயதில் ஷாஷிதா என்ற மகள் உள்ளார். திங்கள்கிழமை முகமது வேலைக்குச் சென்றுவிட்டு மதியம் 2 மணி போல் வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரின் மகள் ஷாஷிதா செல்போனில் நீண்ட நேரம் பேசியுள்ளார். இதைப் பார்த்த முகமது, அவரின் ஆண் நண்பருடன்தான் பேசிக்கொண்டிருக்கிறார் எனச் சந்தேகப்பட்டு அவரைக் கண்டித்துள்ளார். மேலும் `இவ்வாறு தொடர்ந்து செல்போனில் பேசாதே, எனக்குப் பிடிக்காது' எனவும் மகளைக் கண்டித்துள்ளார். அவரின் பேச்சை கண்டுகொள்ளாமல் மீண்டும் போனில் பேச ஆரம்பித்துள்ளார் ஷாஷிதா. 

இதனால் ஆத்திரமடைந்த முகமது மகளின் செல்போனை பிடுங்கித் தரையில் வீசி எறிந்துள்ளார். `சொல் பேச்சைக் கேட்கமாட்டாயா; உனக்கு யார் செல்போன் கொடுத்தது' எனக் கூறி மகளை அடித்து உதைத்துள்ளார். தந்தையின் அடிதாங்க முடியாமல் ஷாஷிதா வெளியே ஓடியுள்ளார். அவரை விடாமல் இழுத்துவந்து வீட்டின் சமையலறைக்குள் வைத்து அவரின் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீயை பற்றவைத்துள்ளார். அப்போது அவரின் மனைவி தடுக்க முயன்றும் அவரால் தடுக்க முடியவில்லை. 

அந்தப் பெண்ணின் கூச்சலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். உடனடியாக ஷாஷிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் 70 சதவிகிதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் முகமதுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க