வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (03/01/2019)

கடைசி தொடர்பு:09:50 (03/01/2019)

சபரிமலை சந்நிதானத்தில் நுழைந்த இரண்டு பெண்களின் பின்னணி #sabarimala 

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு, சபரிமலை சந்நிதானத்தில் முதல் தடவையாக நுழைந்த பெண்கள் என்ற பெயரை பெற்றுள்ளனர் பிந்து அம்மினியும், கனகதுர்காவும். இவர்கள் இருவரும் அரசுப் பணியில் இருப்பதும் தெரியவந்துள்ளது. 

சபரிமலை

பிந்து அம்மினி (41) சொந்த ஊர் பத்தனம்திட்டா. கேரளா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை படித்துள்ளார். வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ளார். தற்போது, கண்ணூர் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இந்தப் பணியில் சேர்வதற்கு முன்பு, கோழிக்கோடு பல்கலைக்கழகம் உட்பட பல சட்டக்கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணி செய்துள்ளார். இவர், இடதுசாரி கேரள வித்தியார்த்தி சங்கத்தில் மாணவர் பிரிவின் தலைவராக இருந்துள்ளார். சி.பி.ஐ (எம்.எல்) கட்சியின் கூட்டங்களில் கலந்துகொண்டுள்ளார். இவரின் கணவர் ஹரிஹரனும் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். 

சபரிமலை சந்நிதானத்தில் கால்பதித்துள்ள இரண்டாவது பெண் கனகதுர்கா (44). இவர், கேரளா மாநில உணவு வழங்கல் துறையில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.  இவரது ஊர் மலப்புரம் அருகில் உள்ள கோழாகூட்டூர். 

பிந்தும் மற்றும் கனகதுர்காவும் சபரிமலை சந்நிதானத்தில் நுழைய விரும்பும் பெண்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் தோழிகளாக இருந்துள்ளனர்.  இவர்கள் இருவரும் டிசம்பர் 24-ம் தேதி சபரிமலை சந்நிதானத்தில் நுழைய முயற்சி செய்துள்ளனர். ஆனால், எதிர்ப்பு காரணமாக நுழைய முடியவில்லை. டிசம்பர் 24-ம் தேதி பிந்துவின் வீடு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இதனால் பயந்துபோன இருவரும் ஒரு வாரம் அமைதியாக இருந்துள்ளனர்.

புத்தாண்டுக்கு அடுத்த நாளான புதன்கிழமை நள்ளிரவு முதல் 1 மணி வரை சபரிமலைக்கு காவல்துறை பாதுகாப்போடு வந்துள்ளனர். அதிகாலை 3.30 மணியளவில் சபரிமலை சந்நிதானத்தில் இருவரும் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை சந்நிதானத்திலிருந்தே கேரளா ஊடகங்களுக்கும் ``நாங்கள் காவல்துறை பாதுகாப்புடன் தரிசனம் செய்தோம். பம்பாவை அடைந்தவுடன் எங்கள் வருகையைப் பற்றி நாங்கள் தகவல் தெரிவிக்கிறோம்” என்று தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது இரண்டு பேரும் காவல்துறையின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.