வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (03/01/2019)

கடைசி தொடர்பு:16:00 (03/01/2019)

முத்தலாக்.. சபரிமலை..! காங்கிரஸின் வேறுபட்ட முடிவுகள்

முத்தலாக்.. சபரிமலை..! காங்கிரஸின் வேறுபட்ட முடிவுகள்

பரிமலை கோயில் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி, அகில இந்திய அளவில் ஒரு நிலைப்பாட்டையும், கேரள மாநில அளவில் வேறொரு நிலைப்பாட்டையும் எடுத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கடந்த 2018-ம் ஆண்டு தமிழகத்திலும், இந்திய அளவிலும் பல்வேறு கவனங்களைப் பெற்ற போராட்டங்கள் நடந்தேறின. டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம், நாடாளுமன்றச் சாலையில் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் எனப் பல்வேறு போராட்டங்களைக் கூறலாம். இந்நிலையில், தற்போது தொடங்கியுள்ள 2019-ம் ஆண்டும் இந்திய அளவில் கவனிக்கக் கூடிய போராட்டத்தோடு தொடங்கியிருக்கிறது கேரள மாநிலம். 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தான் பேசும் பொதுக்கூட்டங்களில் எல்லாம் பி.ஜே.பி-யை மதச்சார்பின்மைக்கு எதிரான கட்சி என விமர்சித்து வருகின்ற அதே நிலையில், கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்வதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது கேரள மாநிலக் காங்கிரஸ் கட்சி.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

சபரிமலைக்குப் பெண்கள் செல்வதற்கான அனுமதியை உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கியது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல மதவாத அமைப்புகள், இந்தத் தீர்ப்புக்கு எதிராகப் போராடி வருவதால், கோயிலுக்குள் செல்ல முயற்சி செய்த பல பெண்கள் மீது தாக்குதல்கள் நிகழ்ந்தேறின. பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பலர், தாங்கள் கோயிலுக்குள் செல்வதற்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தை நாடினர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைச் செயல்படுத்தக் கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்ஸிஸ்ட் கூட்டணி அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கேரள மாநில அரசின் இந்தச் செயல்பாடுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், பி.ஜே.பி மற்றும் கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் உட்பட பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

கடந்த மாதம் 26-ம் தேதி சபரிமலையின் பாரம்பர்யத்தைப் பாதுகாக்கும் வகையில்  `ஐயப்ப ஜோதி’ என்ற நிகழ்ச்சியைப் பல இந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து நடத்தின. இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி-யைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.


பினராயி விஜயன்

இந்த நிகழ்வுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணியைச் சேர்ந்தவர்கள், காசர்கோடிலிருந்து திருவனந்தபுரம்வரை 620 கிலோ மீட்டருக்கு `மகளிர் மதில் சுவர்’ என்ற பல்லாயிரக்கணக்கான பெண்களை ஒன்றிணைத்து பேரணியை நடத்திக் காட்டியுள்ளனர்.. மதச்சார்பின்மை, பாலினச் சமத்துவம் மற்றும் மக்களின் வாழ்வை மீண்டும் இருண்ட காலத்துக்கு அழைத்துச் செல்வதற்கு எதிராக இந்தப் பேரணி என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பேரணி குறித்துக் கருத்து தெரிவித்த நாயர் சேவை சமூக அமைப்பின் பொதுச்செயலாளர் சுகுமாரன் நாயர், ``இது மாதிரியான பேரணிகள், கடவுளின் தேசத்தைப் பேய்களின் தேசமாக்கும் முயற்சியாகும். சபரிமலையில் பல ஆண்டு காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயாராக உள்ளோம்” எனக் கூறினார்.


சபரிமலை போராட்டம்

கேரளாவைச் சேர்ந்த பி.ஜே.பி-யினரின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை அவர்கள் `சபரிமலைக் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கூடாது' என ஒரே நிலைப்பாட்டில்தான் செயல்படுகின்றனர். ஆனால், மதச்சார்பின்மை பற்றிப் பேசிவரும் காங்கிரஸின் நிலைப்பாடு மத்தியில் ஒன்றாகவும், மாநிலத்தில் வேறொன்றாகவும் உள்ளது. நாடாளுமன்றத்தில் பி.ஜே.பியினர் கொண்டுவந்துள்ள முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற விட மாட்டோம் என அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியினர் முடிவெடுத்து நாடாளுமன்றத்திலும் அதற்கு எதிராக விவாதித்தனர்.

அதே நேரத்தில் சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் செல்லும் பிரச்னையில்  தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியினர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கும் நிலையில் கேரள மாநில காங்கிரஸ் கட்சியினர், அந்தத் தீர்ப்புக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர். ‘உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் ஆதரிக்கவில்லை. தேவசம் போர்டு இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டுக்குச் செல்ல வேண்டும்’ எனக் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். கேரளச் சட்டமன்றத்திலும் ஆளுங்கட்சியின் சபரிமலை நிலைப்பாட்டுக்கு எதிராகவே காங்கிரஸ் குரல் எழுப்பியது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மாநில அளவில் தேர்தல் கணக்கைத் தொடங்கி இருக்கிறதா காங்கிரஸ் கட்சி என்ற கேள்வி எழுகிறது. தேசிய அரசியலில் பி.ஜே.பி-யை எதிர்கொள்ள மதச்சார்பின்மை முழக்கம், கேரளாவில் மார்க்சிஸ்டுகளை எதிர்கொள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான நிலைப்பாடு என இரட்டை முகங்களைக் காட்டுகின்றது காங்கிரஸ்" என்றார்.

சமீபத்திய மூன்று மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு ராகுல் காந்தி, ``எதையெல்லாம் செய்யக் கூடாது என மோடியிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டேன்” எனத் தெரிவித்தார். அதேபோல் அவர் தெரிந்து கொள்ளவேண்டிய பாடம் ஒன்று உள்ளது தங்களின் அரசியல் கட்சி கொள்கைக்கு பலமான எதிர்ப்புகள் இருந்தாலும், அதை எப்படித் தேர்தல் களத்தில் வெற்றியாக மாற்றுவது என்பதுதான் அது. அதை ராகுல் புரிந்து கொள்வாரா...?


டிரெண்டிங் @ விகடன்