`நாங்கள் சகோதரர்கள்!' - சிவன் கோயிலில் பூஜை நடத்திய இஸ்லாமிய அமைச்சர் | Rajasthan minister worships in temple

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (03/01/2019)

கடைசி தொடர்பு:15:30 (03/01/2019)

`நாங்கள் சகோதரர்கள்!' - சிவன் கோயிலில் பூஜை நடத்திய இஸ்லாமிய அமைச்சர்

சமீபத்தில் வெளியான ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சியாக அமைந்தது. ராஜஸ்தானில் ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க-வை வீழ்த்தி, காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கேலாட் தேர்வுசெய்யப்பட்டு பதவியேற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது. 

அமைச்சர்  முகமத்

Photo: ANI

ராஜஸ்தான் மாநிலத்தின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக ஷாலே முகமத் பதவியேற்றுக்கொண்டார். அம்மாநிலத்தில் தற்போதைய அமைச்சரவையில் இருக்கும் ஒரே இஸ்லாமிய அமைச்சர் முகமத் தான். இஸ்லாமியத் தலைவரான காஸி ஃபாக்கிரின் மகனான முகமத், ராஜஸ்தானின் பொக்ரான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மாநில அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் முதன்முதலாக தொகுதிக்குத் திரும்பிய முகமத், ஜெய்சல்மெர் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் வழிபாடுசெய்தார்.
 
இந்து முறைப்படி சுமார் அரைமணி நேரத்துக்கும் மேல் பூஜை செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ``கடவுள்களுக்கு சாதிகள் இல்லை. இந்து, முஸ்லிம் என அனைவருக்கும் சில நம்பிக்கைகள் உள்ளன. இந்து முஸ்லிம் என அனைவரும் சகோதரர்கள்தான். இருவருக்கும் பாபா ராம்தேவ் (அப்பகுதியில் உள்ள பாபா ராம்தேவ் கோயிலை குறிப்பிடுகிறார்) மீது இந்து, முஸ்லிம்  அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது. எனது தனிப்பட்ட நம்பிக்கை காரணமாகவே கோயிலுக்கு வருகிறேன். பூஜைகள் செய்கிறேன்” என்றார். 

அவர் இந்துக் கோயில்களுக்குக் சென்று பூஜை செய்வது முதன்முறை கிடையாது. இதற்கு முன்னதாகவும் அவர் கோயில்களில் பூஜைகள் செய்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய கோயிலின் பூசாரி,  ``முகமத், தேர்தலின்போதும் கோயிலுக்கு வந்தார். அதனால், இது முதன்முறை கிடையாது. கோயில்களுக்கும் அவருக்கும் நிறையத் தொடர்பிருக்கிறது” என்றார். 

முகமத், பொக்ரான் தொகுதி சட்டசபைத் தேர்தலில் ஆன்மிகத் தலைவரான சுவாமி ப்ரதாப் பூரி என்ற பா.ஜ.க வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.