வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (03/01/2019)

கடைசி தொடர்பு:22:30 (03/01/2019)

2018... பில்லியன் டாலர் மதிப்பை எட்டிய யூனிகார்ன் ஸ்டார்ட்-அப்கள்!

2018-ம் ஆண்டு, ஸ்டார்ட் - அப் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், இந்த மிகப் பெரிய வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வந்திருப்பதுடன், அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவின் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை ஏறக்குறைய 1 லட்சம் கோடி ரூபாய் தந்து வாங்கியதும் அந்த ஆண்டில்தான். 

ஸ்டார்ட் அப்

2018-ல் ஏறக்குய எட்டு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் யூனிகார்ன் என்கிற நிலையை எட்டியுள்ளன. யூனிகார்ன் என்றால்... 100 கோடி டாலர் மதிப்பை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7,000 கோடி ரூபாய்) எட்டிய நிறுவனங்களைத்தான் யூனிகார்ன் நிறுவனங்கள் என்று சொல்லப்படுகின்றன. யூனிகார்ன் என்றால், ‘பறக்கும் குதிரை’ என்று அர்த்தம். கடந்த எந்தெந்த நிறுவனங்கள் ‘யூனிகார்ன்’ எனப்படும் சிறப்புத் தகுதி நிலையை எட்டியது என்று பார்ப்போமா...

ஃப்ளிப்கார்ட்

இந்த நிறுவனம் 2007-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள், சச்சின் பான்சல் மற்றும் பின்னி பான்சல் ஆவார்கள். இந்த நிறுவனத்தின் மதிப்பு, கடந்த சில வருடங்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்துவந்தது. இந்த நிறுவனத்தின் மதிப்பு, முந்தைய வருடத்தைவிட இந்த ஆண்டு மிகப் பெரிய அளவில் உயர்ந்தது. கடந்த 2017-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் மதிப்பு, இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.76,769 கோடியாக இருந்தது. 2018-ம் ஆண்டின் முடிவில் ரூ.1,46,559 கோடி அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இது, கிட்டத்தட்ட இரு மடங்கு உயர்வாகும். இந்த நிறுவனத்தின் மதிப்பு, ஒரே ஆண்டில் இத்தனை தூரம் உயர்ந்துள்ளது ஆச்சர்யம் தரும் விஷயமாகும். 

பே டிஎம்

இந்த நிறுவனம், கடந்த 2010-ம் ஆண்டில் விஜய் சேகர் சர்மாவால் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், அனைவரையும் டிஜிட்டல் முறையில் எளிதில் பணப் பரிமாற்றம் செய்ய வைப்பதுதான். ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய மதிப்பைக் கொண்டிருப்பது பே டிஎம் நிறுவனம்தான். கடந்த ஓர் ஆண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் மதிப்பு ஏறக்குறைய இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 2017-ல் ரூ.48,853 கோடியாக இருந்த இந்த நிறுவனத்தின் மதிப்பு, 2018-ல் ரூ.1,04,685 கோடி என்கிற உயர்ந்திருக்கிறது. டிஜிட்டல் பணப் பரிமாற்றம்தான் இனிவரும் காலத்தில் ஆட்சி செலுத்தும் என்பதால், இந்த நிறுவனத்தின் மதிப்பு இனிவரும் காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என்பதில் ஆச்சர்யமில்லை. 

ஓயோ 

இந்த நிறுவனம், ஐந்து வருடத்திற்குமுன் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தை இளம் வயதுடைய ரித்தீஷ் அகர்வால் ஆரம்பித்தார். மிகக் குறுகிய காலத்தில், மிகப்பெரிய அளவு மதிப்பை இந்த நிறுவனம் பெற்றிருக்கிறது. 

இந்த நிறுவனத்தின் மதிப்பு முந்தைய வருடங்களுடன் ஒப்பிடுகையில், 2018-ல் மிகப் பெரிய அளவிற்கு உயர்ந்துள்ளது.   அதாவது, 2017-ம் ஆண்டில் ரூ.5,932 கோடி இருந்து, 2018-ல் 34,895 கோடி ரூபாய் அளவிற்கு மதிப்பீட்டை இந்த நிறுவனம் உயர்ந்துள்ளது. 

ஓலா 

கடந்த 2010-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் நிறுவனர் பாவிஸ் அகர்வால். ஆன்லைன் டாக்ஸி சேவை இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் 24 மணி நேரமும் அளிப்பதுதான் இந்த நிறுவனத்தின் நோக்கம். குறுகிய காலத்திலேயே இந்த சேவை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பெரும்பாலான மக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திவருகின்றனர். இந்த நிறுவனத்தின் மதிப்பு 2017-ம் ஆண்டில் ரூ.24,426.5 கோடியில் இருந்து, 2018-ம் ஆண்டில் ரூ.31,405.5 கோடி அளவிற்கு இதன் மதிப்பு உயர்ந்துள்ளது. 

பைஜூஸ் 

ரவீந்திரன் என்பவரால் கடந்த 2011-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். இணையதளம் மூலமாக கல்விச் சேவையை அளிப்பது இந்த நிறுவனத்தின் முக்கியமான செயல்பாடாகும். இதன்மூலம், உலகின் எந்த மூலையிலிருந்து வேண்டுமானாலும், மாணவர்கள் பாடம் கற்க முடியும். இந்த நிறுவனத்தின் மதிப்பு, கடந்த 2017-ம் ஆண்டில் ரூ.5,568 கோடியாக இருந்தது, 2018-ம் ஆண்டில் ரூ.25,056 கோடி என்கிற அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் சேவை அதிக  பயனீட்டாளர்களை ஈர்த்துவருவதால், இதன் மதிப்பு கடந்த ஆண்டில் பெரிய அளவில் உயர்ந்ததுடன், அடுத்துவரும் ஆண்டுகளிலும் இன்னும் உயர வாய்ப்புள்ளது. 

ஸ்விக்கி

ஸ்விக்கி 

2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் முக்கியமான தொழிலே, ஆன்லைன் மூலமாக உணவைக் கொண்டுவந்து தருவதாகும். இந்த நிறுவனத்தின் மதிப்பு கடந்த 2017-ல் ரூ.4,872 கோடியாக இருந்தது, 2018-ல் ரூ.22,968 கோடியாக உயர்ந்துள்ளது. 

ஜொமோட்டோ 

2008-ம் ஆண்டில் தீபெண்டர் கோயல் மற்றும் பன்கட்ச் சாதா ஆகிய இருவரால் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். ஸ்விக்கி போல இதுவும் ஆன்லைன் மூலம் உணவளிக்கும் நிறுவனம். இந்த நிறுவனத்தின் மதிப்பு 2017-ல் ரூ 6,960 கோடியிலிருந்து 2018-ல் ரூ.17,400 கோடி என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளது. 

இந்த நிறுவனங்கள் தவிர, பே டிஎம் மால் நிறுவனத்தின் மதிப்பு 14,000 ரூபாயாகவும், பில்டெஸ்க் நிறுவனம் 12,000 கோடி ரூபாயாகவும், ஃப்ரெஷ் ஒர்க்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 10,500 கோடி ரூபாயாகவும் கணிக்கப்பட்டுள்ளது. பாலிசி பஜார், உடான், ஷாப்க்ளூஸ், இன்மொபி நிறுவனங்களின் மதிப்பு, 1 பில்லியன் டாலர் அளவுக்கு கணிக்கப்பட்டுள்ளது.