`தேவைக்கு அதிகமாகவே 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன!’ - மத்திய அரசு | Centre explains about 2000 rupees note production

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (04/01/2019)

கடைசி தொடர்பு:17:00 (04/01/2019)

`தேவைக்கு அதிகமாகவே 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன!’ - மத்திய அரசு

'இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் விவகாரத்தில் எந்த முடிவும் சமீபத்தில் எடுக்கப்படவில்லை' என பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் விளக்கமளித்திருக்கிறார். 

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள்

சுபாஷ் சந்திர கார்க்புழக்கத்தில்  இருந்த ரூ.1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாகக் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு அறிவித்தது. கறுப்புப் பண ஒழிப்பு மற்றும் ஊழலைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு புழக்கத்தில் விட்டது. இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சாமான்ய மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளானதாகப் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 2,000 ரூபாய் நோட்டுகளால் ஊழல் பெருகவே செய்திருக்கிறது என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. இதனால், புதிய 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் முடிவில் மத்திய அரசு இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாவதுண்டு. 

அந்த வகையில், 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்திவிட்டதாகவும், விரைவில் அதைத் திரும்பப் பெற இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், `2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி திட்டமிட்டபடி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. போதுமான அளவுக்கு 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன. தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளில் 35 சதவிகிதத்துக்கும் அதிகமானவை, 2,000 ரூபாய் நோட்டுகளே. 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் விவகாரம்குறித்து புதிதாக எந்த முடிவும் சமீபத்தில் எடுக்கப்படவில்லை’’ என்று கூறியிருக்கிறார்.