‘இந்த ஆண்டு ரஃபேல் விமானம் இந்தியாவுக்கு வழங்கப்படும்’ - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு | if congress comes to power in 2019, a criminal investigation will be launched into the Rafale deal

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (04/01/2019)

கடைசி தொடர்பு:18:00 (04/01/2019)

‘இந்த ஆண்டு ரஃபேல் விமானம் இந்தியாவுக்கு வழங்கப்படும்’ - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

இந்த வருடம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் விவகாரத்தை கிரிமினல் வழக்காக விசாரிக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தில் கடந்த சில தினங்களாக ரஃபேல் விமான விவகாரம் தொடர்பான வாதமே நடைபெற்று வருகிறது. நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘ரஃபேல் விவகாரத்தில் தன் மீதான புகார்கள் குறித்து விளக்கம் அளிப்பதற்கு பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை. அதனால்தான் அவர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தன் அறையில் ஒளிந்திருக்கிறார். ரஃபேல் விவகாரம் தொடர்பாகக் கோப்புகளில் இடம் பெற்றுள்ள விவரங்களை நிர்மலா சீதாராமன் வெளியிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

நிர்மலா சீதாராமன்

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் ராகுலின் கருத்துக்குப் பதில் அளித்துப் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நாட்டின் பாதுகாப்புக்காகவே விமானம் வாங்கப்படுகிறது. ரஃபேல் விவகாரத்தில் உண்மையைக் கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. 2014-ம் ஆண்டு அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி விமானம் வாங்கப் பணம் இல்லை எனத் தெரிவித்தார். அவர்களுக்கு விமானம் வாங்க விருப்பம் இல்லை. ஆனால், எங்கள் ஆட்சிக்காலத்தில் ராணுவ உபகரணங்களுக்குச் சரியான முன்னுரிமை வழங்கப்படும். இந்த ஆண்டு ரஃபேல் விமானம் இந்தியாவுக்கு வழங்கப்படும். மேலும் 36 விமானங்கள் 2022-ம் ஆண்டு வழங்கப்படும்” எனப் பேசினார்.

இதற்கிடையில் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “நாங்கள் இந்த ஆண்டு (2019) ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் விவகாரத்தை கிரிமினல் வழக்காக விசாரித்து குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வாங்கித் தருவோம்” எனத் தெரிவித்துள்ளார்.