வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (04/01/2019)

கடைசி தொடர்பு:19:25 (04/01/2019)

மேம்பாலம் மீது நின்ற ரயில்! - உயிரை பணையம் வைத்து மீண்டும் இயக்கிய ரயில்வே கார்டு #HatsOff

சரக்கு ரயிலின் கடைசிப் பெட்டியில் கொடியுடன் நின்றுகொண்டிருக்கும் ரயில் கார்டுக்கு சிறிய வயதில் டாட்டா காட்டியிருப்போம்.   `ரயிலின் பின்னால் ஜாலியாக  அமர்ந்து செல்கிறார்கள். ஈஸியான பணி இவர்களுடையது’ என்றுகூட யோசித்திருப்போம். ஆனால், அன்றைய காலகட்டத்திலும் சரி, இன்றைய காலகட்டத்திலும் சரி Railway guard என்று அழைக்கப்படும் ரயில் பாதுகாவலர்களின் பணி அவ்வளவு சுலபமானதில்லை. 

ரயில்வே

முன்பெல்லாம் கொள்ளையர்கள் தொல்லை அதிகம். ரயிலை வழிமறித்து கொள்ளை அடிப்பார்கள். கொள்ளையர்களிடம் சண்டையிட்டு பயணிகளைப் பாதுகாக்க வேண்டியது கார்டின் பொறுப்பு. இப்போதெல்லாம் இதுபோன்ற பிரச்னைகள் இல்லை. ஆனாலும், அவர்களின் பணி சுலபமானது கிடையாது. ரயில்வே கேட்டை கடப்பது, ஆபத்து சிக்னலைக் கவனிப்பது, ரயில் பயணிகளின் பாதுகாப்பு என அனைத்துக்குமே அவர்தான் பொறுப்பு. 

ரயில் பாதுகாவலர் எவ்வளவு கடமை உணர்ச்சியோடு செயல்பட வேண்டும் என்பதை இந்த வீடியோ உணர்த்தும்.  

 

 

கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி சாம்ராஜ் நகர் - திருப்பதி இடையே சென்ற விரைவு ரயில், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணா ரயில் நிலையம் அருகே இரும்பு மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, பயணி ஒருவர் அவசியம் இல்லாமல் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்ததால் ரயில் இரும்பு மேம்பாலத்தின் மேல் நின்றது. உயரமான அபாயகரமான அந்தப் பாலத்தில் ரயில் நின்ற நிலையில், அங்கிருந்த மூத்த ரயில்வே பாதுகாவலர் விஷ்ணுமூர்த்தி சற்றும் யோசிக்காமல் குறுகிய பாலத்தில் இறங்கி, ரயிலின் ப்ரேக் சிஸ்டத்தை மீண்டும் இயங்க வழிவகை செய்தார். அதுமட்டுமன்றி அபாய சங்கிலியை இழுத்தவரைப் பிடித்து ஆர்.பி.எஃப்ஃபிடம் ஒப்படைத்தார்.

பியுஷ்
 

ரயிலில் இருந்த பயணி ஒருவர், விஷ்ணுமூர்த்தி பாலத்தில் இறங்கி ரயிலை மீண்டும் இயக்க வைத்ததை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்த வீடியோவை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பகிர்ந்து விஷ்ணுமூர்த்திக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் ரயில்வே பொது மேலாளர் அஜய்குமார் சிங், விஷ்ணுமூர்த்தியைப் பாராட்டி அவருக்குச் சான்றிதழ் மற்றும் 5,000 ரூபாய் பரிசு வழங்கியுள்ளார்.

ரயில்வே கார்டு
 

ரயில் பாதுகாவலர் துரிதமாகச் செயல்பட்டதை நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர். `இதுபோன்ற அபாயகரமான சமயங்களில் ரயில் பாதுகாவலரின் பாதுகாப்பிலும் ரயில்வே நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்’ என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. ரயில் பாதுகாவலர்கள் (Railway guard) பற்றிய உங்களின் கருத்து அல்லது நீங்கள் சந்தித்த அனுபவத்தை இங்கே பதிவு செய்யலாம்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க