வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (05/01/2019)

கடைசி தொடர்பு:15:13 (05/01/2019)

`எக்ஸலன்ட் தம்பிதுரை' - நிர்மலா சீதாராமனைத் திணறடித்த அ.தி.மு.க-வைப் பாராட்டிய ராகுல் காந்தி!

ரஃபேல் விமானம் தொடர்பாக நிர்மலா சீதாராமனுக்கு எதிராகக் கேள்வி எழுப்பிய அ.தி.மு.க எம்பி தம்பிதுரையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டியுள்ளார்.

தம்பிதுரை

நாடாளுமன்ற குளிர் காலத் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் முழுவதுமாகவே காங்கிரஸ் - பா.ஜ.க இடையே ரஃபேல் போர் விமானம் தொடர்பாக காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. விவாதங்களுக்கு மத்தியில் அ.தி.மு.க எம்.பி-க்கள் மேக்கே தாட்டூ அணை உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக அமளியில் ஈடுபட்டனர். 

முன்னதாக ராகுல் காந்தி பேசும்போதுகூட, அ.தி.மு.க எம்.பி-க்கள் அவரைப் பேச விடாமல் தொடர்ந்து கூச்சல் எழுப்பிக்கொண்டிருந்தனர். இதனால் சீற்றமடைந்த ராகுல்காந்தி, ``என்னை விவாதிக்கவிடாமல் அ.தி.மு.க எம்.பி-க்கள் கூச்சல் எழுப்புகின்றனர். ஏன் இப்படிச் செய்கிறீர்கள், பிரதமர் மோடியைக் காப்பாற்ற நினைக்கிறீர்களா. தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அ.தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க-வுக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கின்றனர். என்னைப் பேசவிடாமல் தடுக்கின்றனர்" என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். 

தம்பிதுரை - நிர்மலா சீதாராமன்

இப்படியான நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், ரஃபேல் விமானம் தொடர்பாக நிர்மலா சீதாராமனுக்கு எதிராக அ.தி.மு.க எம்பி தம்பிதுரை கேள்வி எழுப்பித் திணறடித்தார். நேற்றைய கூட்டத்தொடரில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ``மத்திய அரசின் ஹெச்.ஏ.எல் நிறுவனம் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டுள்ளது" என்று கூறினார். இதற்குப் பதில் பேசிய தம்பிதுரை, ``அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இரண்டு கேள்விகளை கேட்க விரும்புகிறேன். அகஸ்டா வெஸ்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தைக் காங்கிரஸ் கட்சி ஏன் மத்திய அரசின் ஹெச்.ஏ.எல் நிறுவனத்துக்குக் கொடுக்கவில்லை என நிர்மலா சீதாராமன் கேட்டார். எனக்குத் தெரிந்து அகஸ்டா ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை இறுதி செய்தது வாஜ்பாய் அரசுதான். இது 2003ம் ஆண்டு நடந்தது. வாஜ்பாய்தான் அதை இறுதி முடிவு செய்தார். இதைப் பற்றி நிர்மலா சீதாராமன் பதில் கூற வேண்டும். இதேபோல் ஹெச்.ஏ.எல் நிறுவனம் குறித்து நிர்மலா சீதாராமன் நிறைய பேசினார்கள்.

ராகுல் காந்தி

`மேட் இன் இந்தியா', `மேக் இன் இந்தியா' எனக் கூறி வரும் பா.ஜ.க அரசு ஏன் ரஃபேல் ஒப்பந்தத்தை அரசின் சொந்த நிறுவனமான ஹெச்.ஏ.எல் நிறுவனத்துக்குக் கொடுக்காமல் ஏன் ரிலையன்ஸ் நிறுவனத்துக்குக் கொடுத்தீர்கள். ரிலையன்ஸ் ஒரு புது நிறுவனம் மட்டுமல்ல பொருளாதார ரீதியாகப் பின்னடைவு அடைந்த நிறுவனமும் கூட. ஹெச்.ஏ.எல் நிறுவனம் மிகப்பெரிய முன்னேற்றமடைந்துள்ளது என நீங்கள்தான் கூறினீர்கள். அப்படி இருந்தும் ஏன் அந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தைக் கொடுக்கவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.

தம்பிதுரை இப்படிக் கிடுக்குபிடியாகக் கேள்வி கேட்டதும் அவரின் பின்னால் இருந்த ராகுல் காந்தி, மேசையைத் தட்டி வெகுவாக தம்பிதுரையின் பேச்சைப் பாராட்டினார். அவரைப் போல் மற்ற காங்கிரஸ் உறுப்பினர்களும், தம்பிதுரையின் பேச்சைப் பாராட்டினார்கள். அ.தி.மு.கவைப் பொறுத்தவரைத் தமிழ்நாடு சார்ந்த விஷயங்களில் மட்டும்தான் மத்திய அரசை நாடாளுமன்றத்தில் இதுவரை விமர்சித்து வந்தார்கள். முதல்முறையாக ரஃபேல் விமானம் தொடர்பாக அ.தி.மு.க சார்பில் கேள்வி எழுப்பியது அங்குள்ள பா.ஜ.க எம்.பிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க