வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (05/01/2019)

கடைசி தொடர்பு:21:10 (05/01/2019)

பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுகிறேன்! - பிரகாஷ் ராஜ் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில், பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்திருக்கிறார்.

பிரகாஷ் ராஜ்

நடிகர் பிரகாஷ் ராஜ், சமீபகாலமாக அரசியல் நடவடிக்கைகள்குறித்து கருத்து தெரிவித்துவருகிறார். பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலையின்போது, பிரதமர் நரேந்திர மோடியை இவர் விமர்சித்திருந்தார். இதனால், பா.ஜ.க தலைவர்கள் பலரும் பிரகாஷ் ராஜுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தனர்.

பிரகாஷ் ராஜ் ட்வீட்

சமூக வலைதளங்கள் மூலமாக, ஆளும் பா.ஜ.க அரசுமீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் பிரகாஷ் ராஜ், சமீபத்தில் அரசியலில் களமிறங்குவதாக அறிவித்திருந்தார். ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளுடன் ட்விட்டரில் பதிவிட்டிருந்த பிரகாஷ் ராஜ், `புதிய மாற்றத்துக்கான நேரம் இது. எனக்கான பொறுப்புகள் கூடியுள்ளன. உங்கள் அனைவரின் ஆதரவுடன், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளேன். தொகுதிகுறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும். நாடாளுமன்றத்திலும் மக்களுக்கான அரசு வேண்டும்’ எனப் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அவருக்கு வாழ்த்துகள் குவிந்துவந்தன. 

பிரகாஷ் ராஜ்

இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்தியத் தொகுதியில் போட்டியிடுவதாக ட்விட்டரில் அறிவித்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். இதுகுறித்த அவரது பதிவில், `எனது புதிய பயணத்துக்காக வாழ்த்தும் ஊக்கமும் அளித்த அனைவருக்கும் நன்றி. மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவின் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். கூடுதல் தகவல்களை ஊடகங்கள்மூலம் சில நாள்களில் வெளியிடுகிறேன்’ என்று பதிவிட்டிருக்கிறார்.