வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (06/01/2019)

கடைசி தொடர்பு:17:45 (06/01/2019)

மத்திய அரசுக்கு எதிராக, 12 கோடி தொழிலாளர்கள் 48 மணி நேரம் போராட்டம்..!

மத்திய அரசுக்கு எதிராக, 12 கோடி தொழிலாளர்கள் 48 மணி நேரம் போராட்டம்..!

தேசிய அளவில் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுக்க ஆரம்பித்திருக்கிறது போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம். ஏற்கனவே, தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சி.ஐ.டி.யு உள்ளிட்ட  20-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, ஊதிய உயர்வு, ஓய்வூதியத் தொகையை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வரும் நிலையில், தற்போது நாடு தழுவிய அளவில் போக்குவரத்துத் தொழிலாளர்கள், மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகளைக் கண்டித்து ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இரு தினங்களிலும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

தொழிலாளர் போராட்டம்

தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர்கள், கடந்த ஆண்டு பொங்கல் நேரத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். தற்போது மீண்டும் பொங்கல் நெருங்கும் நேரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை அறிவித்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் பி.ஜே.பி. அரசு பதவி ஏற்று, நான்கரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில்,  பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி அமல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு போன்ற பிரச்னைகளால் சாமான்யர்கள் மட்டுமல்லாது தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற பிரச்னைகளை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகப் போராட்டத்தை அறிவித்துள்ளனர் போக்குவரத்துத் தொழிலாளர்கள். 

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

இந்த போராட்டங்களின் கோரிக்கைகளாகத் தொழிலாளர்கள் முன்வைப்பது, தேசிய அளவில் தொடர்ந்து அதிகரிக்கும் அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவது, பொதுவிநியோகத் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும், தேசிய அளவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதால், புதிய  வேலை வாய்ப்புகளை உருவாக்க முயற்சிகள் எடுக்கவேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சங்கங்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பனவாகும். 

இதேபோல் மாநில நிதி ஒதுக்கீடுகளின் போது  மாநில அரசுகளின் போக்குவரத்துத் துறைக்கு ஒதுக்கும் நிதியின் அளவை உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு, தற்போது இயங்கி வரும் பேருந்துகளில் 2000-க்கும் மேற்பட்ட பேருந்துகளை நிறுத்தப்போவதாக வெளியாகும் அறிவிப்பைக் கைவிட வேண்டும் என்றும் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளினால் 25,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்பதுடன், குக்கிராமங்களுக்குச் சரியான போக்குவரத்து வசதிகள் கிடைக்காத நிலையும் அதிகரிக்கும் என்று தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, பேருந்துகளின் எண்ணிக்கைகளைக் குறைப்பதை உடனடியாகக் கைவிடவேண்டும், பல ஆண்டுகளாகப் போராடி வரும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாகத் தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் தொழிலாளர்கள் முன் வைத்துள்ளனர்.ஆறுமுக நாயினார்

இதுகுறித்து சி.ஐ.டி.யு மாநிலப் பொதுச்செயலாளர்  ஆறுமுக நயினாரிடம் பேசியபோது, “தேசிய அளவில் தொழிலாளர்கள் முன்னெடுக்கும் இந்த போராட்டமானது.சமூகப் பாதுகாப்பு, மோட்டார் சட்ட விதிகளில் திருத்தத்தை ஏற்படுத்தக்கூடாது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டு மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தனியார் தொழிலாளர் சம்மேளனங்கள் ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளன. கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் 12 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் மொத்தம் 48 மணி நேரம் நடைபெறவுள்ள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். அடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் மத்தியில் ஆளும் அரசுக்கு ஒரு அழுத்தத்தைத் தருவதற்கான முன்னெடுப்புதான் இந்த வேலைநிறுத்தப் போராட்டம்” என்றார்.

தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண வேண்டியது உடனடி அவசியம்.


டிரெண்டிங் @ விகடன்