வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (06/01/2019)

கடைசி தொடர்பு:15:17 (06/01/2019)

‘நீங்கள் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்’ - வீராங்கனையை விளாசிய அமைச்சர்

ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அதே மாநிலத்தைச் சேர்ந்த மனு பாகேர் என்ற 16 வயது சிறுமி கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடந்த யூத் ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொண்டு துப்பாக்கிச் சுடுதலில் தங்கப் பதக்கம் வென்றார். 

மனு

அந்தப் போட்டியில் வெற்றிபெற்றதற்காகச் சிறுமி மனுவுக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும் என ஹரியானா அரசு அறிவித்திருந்தது. பரிசுத்தொகை அறிவித்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் அது வழங்கப்படாமல் உள்ளது. இதனால் வீராங்கனை மனு தன் ட்விட்டர் பக்கத்தில் ஹரியானா விளையாட்டுத் துறை அமைச்சர் அறிவித்த பரிசுத்தொகையை டேக் செய்து அதனுடன், “ ஹரியானாவில் சிலர் யூத் ஒலிம்பிக் பரிசுத்தொகையில் விளையாடுகிறார்கள். இது உற்சாகப்படுத்தும் முயற்சியா இல்லை கண்துடைப்பா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். 

இவரின் கேள்விக்கு ட்விட்டரில் பதில் அளித்திருந்த விளையாட்டுத் துறை அமைச்சர், “ மனு பாகேர் இதை சமூகவலைதளத்தில் அறிவிக்கும் முன் விளையாட்டுத் துறையில் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ஒரு மாநில அரசையே அவமதிப்பது கண்டனத்துக்குரியது. விரைவில் உங்களுக்கு 2 கோடி ரூபாய் வரும். அது வரும் போது நிச்சயம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

விளையாட்டு வீரர்களுக்கு நல்ல பழக்கம் இருக்க வேண்டும். பாகேர் உங்களின் செயலுக்கு நிச்சயம் நீங்கள் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். நீங்கள் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது. அதனால் உங்கள் விளையாட்டில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்தினால் நல்லது” எனத் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்தப் பதில் ஹரியானாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் இது தொடர்பாக பேசியுள்ள ஹரியானா முதல்வர் மனோகர் லால், “பீஹார் அரசு விதிகளின் படி மனு பாகேருக்கு விரைவில் பரிசு தொகை வழங்கப்படும். ஆனால் இது போன்று ட்வீட்போடுவது முறையல்ல. இந்த விசயத்தில் வேறு யாரும் இது போன்று குறை கூறியதில்லை” எனக் கூறியுள்ளார்.