`மக்களவைத் தேர்தலில் மோடி அலைக்கு சாத்தியமில்லை!’ - பா.ஜ.க மூத்த தலைவர் கணிப்பு | The Modi mantra is unlikely to work again says BJP Leader Sangh Priya Gautam

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (06/01/2019)

கடைசி தொடர்பு:18:30 (06/01/2019)

`மக்களவைத் தேர்தலில் மோடி அலைக்கு சாத்தியமில்லை!’ - பா.ஜ.க மூத்த தலைவர் கணிப்பு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலை வீச வாய்ப்பில்லை என பா.ஜ.கவின் மூத்த தலைவர் சங்பிரியா கௌதம் தெரிவித்துள்ளார்.

மோடி - அமித்ஷா

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் மூன்று இடங்களில் காங்கிரஸும் இரண்டு இடங்களில் மாநில கட்சிகளும் வெற்றி பெற்றன. இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் பா.ஜ.க அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் பா.ஜ.க மீது மக்களின் நம்பிக்கை குறைந்துவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ.கவை சேர்ந்த மூத்த தலைவரான சங்பிரியா கௌதம், ‘ வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலை வீசுவது கடினம்’ எனக் கூறியிருப்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்பிரியா கௌதம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “ வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மோடி மந்திரம் நாட்டு மக்களிடையே பலிக்காது. அதனை பா.ஜ.க தொண்டர்களிடம் தனித்தனியாகக் கேட்டால் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் ஏனோ அமைதிக் காக்கிறார்கள். பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா, தன் தலைவர் பதவியை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகானிடம் வழங்கிவிட்டு அவர் மக்களவை பணிகளை மட்டுமே செய்தால் நன்றாக இருக்கும். மேலும் கப்பல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை துணைப் பிரதமராக அறிவிக்க வேண்டும். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை உ.பி முதல்வராக்க வேண்டும். யோகி ஆதித்யநாத்தை ஏதாவது மதம் சார்ந்த வேலை செய்ய அனுப்புங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜ்நாத் சிங் - கட்கரி

இதனைத்தொடர்ந்து பா.ஜ.கவின் திட்ட கமிஷன் பெயரை மாற்றியதற்காகவும் மத்திய வங்கியின் புலனாய்வு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி விவகாரங்களில் பா.ஜ.க தலையிடுவதற்கு கௌதம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். சங்பிரியா கௌதம், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். இவர் பா.ஜ.கவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.