`இரண்டாவது முறையாக என்.டி.ஆரின் முதுகில் குத்திவிட்டார் சந்திரபாபு நாயுடு!' - பிரதமர் மோடி விமர்சனம் | Today those in power in AP are stabbed NTR in the back, for the second time, says PM Modi

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (06/01/2019)

கடைசி தொடர்பு:22:00 (06/01/2019)

`இரண்டாவது முறையாக என்.டி.ஆரின் முதுகில் குத்திவிட்டார் சந்திரபாபு நாயுடு!' - பிரதமர் மோடி விமர்சனம்

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து இரண்டாவது முறையாக என்.டி.ராமராவின் முதுகில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குத்திவிட்டதாக பிரதமர் மோடி விமர்சித்திருக்கிறார். 

பிரதமர் மோடி

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி நாடு முழுவதும் உள்ள பா.ஜ.கவின் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். சமீபத்தில் தமிழகப் பொறுப்பாளர்களுடன் பேசிய அவர், இன்று ஆந்திராவின் அனந்த்பூர், கடப்பா, கர்னூல், நரசராவ்பேட்டை மற்றும் திருப்பதி ஆகிய தொகுதிகளின் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். 

பிரதமர் மோடி கலந்துரையாடல்

பிரதமர் மோடி, சமீபத்தில் பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் பேசுகையில், `காங்கிரஸுக்கு எதிராக மற்ற கட்சிகளை ஒன்றிணைந்து கூட்டணியை வழிநடத்தியவர் என்.டி.ராமராவ். ஆனால், அவரது சொந்த மருமகனோ, தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியிடம் மண்டியிட்டுக் கிடக்கிறார். 
தெலுங்கு மக்களின் உண்மையான பெருமையாக இருந்தவர் என்.டி.ஆர். தெலுங்கு மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்திய காங்கிரஸ் கட்சியை அவர் என்றைக்கும் மன்னிக்க மாட்டார். ஆனால், இன்று ஆந்திராவில் பதவியில் இருப்பவர்கள் மக்களின் உணர்வுகளை மதிக்காமல், பதவிக்காக என்.டி.ஆரின் முதுகில் இரண்டாவது முறையாகக் குத்தியுள்ளார்கள். `ஸ்வர்ண ஆந்திரப் பிரதேசம்’ என்ற என்.டி.ஆரின் கனவு, வளர்ச்சி எனும் கனியின் சுவையை ஒரு குடும்பம் மட்டுமே அனுபவிப்பது அல்ல. மாறாக, மாநில மக்களில் ஒவ்வொருவரும் அறியத் தொடங்கினால்தான் நிறைவேறும். ஆந்திர  இளைஞர்களின் மாபெரும் சக்தியால் அது நிறைவேறும்’ என்று பேசினார்.