வெளியிடப்பட்ட நேரம்: 22:45 (06/01/2019)

கடைசி தொடர்பு:22:45 (06/01/2019)

`அவர் முன்னிலையில் பதவியேற்றுக் கொள்வதா?’ - சர்ச்சையில் தெலங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ

இந்துக்களுக்கு எதிராகப் பேசிவரும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியைச் சேர்ந்த மும்தாஜ் அகமது கான் முன்னிலையில் தான் பதவியேற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறி தெலங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். 

தெலங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங்

Photo Credit: ANI

சமீபத்தில் நடந்துமுடிந்த தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 119 இடங்களில் 88 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சியைப் பிடித்தது. எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா வரும் 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பதவியேற்பு விழாவை ஒட்டி அம்மாநில சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியைச் சேர்ந்தவரும் ஐந்துமுறை எம்.எல்.ஏவுமான மும்தாஜ் அகமது கான் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

இந்தநிலையில், இந்துக்களுக்கு எதிராகப் பேசிவரும் கட்சியைச் சேர்ந்த அவர் முன்னிலையில் தான் பதவியேற்றுக் கொள்ள மாட்டேன் என்று பேசி பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜ் சிங் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சர்ச்சைகளுக்குப் பெயர் போன ராஜ் சிங், பா.ஜ.க சார்பில் வென்ற ஒரே ஒரு எம்.எல்.ஏ ஆவார். ஹைதராபாத்தின் கோஷாமஹால் தொகுதியில் நின்று அவர் வெற்றிபெற்றிருக்கிறார். 

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

ராஜ் சிங் பேசுவது போல சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோவில், `ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியினர் சொல்படி நடந்துவரும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், இடைக்கால சபாநாயகராக 3 நாள்களுக்கு மும்தாஜ் அகமது கான் செயல்படுவார் என்று நேற்று முடிவெடுத்திருக்கிறார். இந்துக்களை வெளியேற்ற வேண்டும் என்று தொடர்ந்து பேசி வரும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியைச் சேர்ந்தவர் முன்னிலையில் நான் பதவியேற்றுக் கொள்ள மாட்டேன். இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தெலங்கானா சட்டமன்றத்துக்குள்ளும் நான் நுழைய மாட்டேன். வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே போன்ற வார்த்தைகளை ஒருபோதும் உச்சரிக்க மாட்டோம் என்று கூறுபவர்களின் கட்சியைச் சேர்ந்தவர் முன்னிலையில் நான் பதவியேற்க மாட்டேன்’’ என்று அவர் பேசியிருக்கிறார். 
இதேபோல், கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ராஜா சிங், ``தெலங்கானாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே போன்ற வார்த்தைகளை உச்சரிக்காதவர்களை நாட்டை விட்டே வெளியேற்றுவோம்’’ என்று பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.