வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (07/01/2019)

கடைசி தொடர்பு:12:40 (07/01/2019)

''சினிமாக்காரர்கள் இனி தமிழகத்தில் முதல்வராக முடியாது!'' - கொச்சியில் சத்யராஜ் பேட்டி 

``சினிமாக்காரர்கள், இனிமேல் தமிழகத்தில் முதல்வராக முடியாது'' என்று கொச்சியில் 'மலையாள  மனோராமா' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். 

சத்யராஜ்

நடிகர் சத்யராஜ் நடித்துள்ள 'கனா' சினிமா புரமோஷன் நிகழ்ச்சி கொச்சியில் நடைபெற்றது.  அப்போது, 'மலையாள மனோராமா' தொலைக்காட்சிக்கு  பேட்டியளித்த  அவர், '' சினிமாக்காரர்களைவிட தமிழகத்தில் நல்லகண்ணு போன்ற சிறந்த தலைவர்கள் தமிழகத்தில் உள்ளனர். தமிழக மக்கள், சினிமாக்காரர்களைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும் நல்லகண்ணு போன்ற நல்ல மனிதர்களைத் தேர்வுசெய்ய வேண்டும்'' என்றார். 

மேலும் சத்யராஜ் கூறுகையில், ''சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வந்து முதலமைச்சராகிவிடவே ஆசைப்படுகின்றனர். மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உண்மையான அக்கறை அவர்களிடத்தில் கிடையாது. கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. பினராயி விஜயன், தேர்ந்த அரசியல்வாதி. மக்கள் நலனில் அக்கறைகொண்டவர். வாய்ப்பு இருந்தால், தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைய வேண்டுமென்பதுதான் என் ஆசை. சினிமா நடிகர்களுக்கு முதல்வராகும் தகுதி இல்லை. இத்தகைய  பதவியில் அமர அர்ப்பணிப்பு  உணர்வு , தியாக உணர்வு வேண்டும். மக்களின் வேதனைகள், பிரச்னைகள் சினிமாக்காரர்களுக்குத் தெரியாது. சினிமா பாப்புலாரிட்டியைப் பயன்படுத்தி முதல்வராக ஆசைப்படுவது தவறு'' என்றும் குறிப்பிட்டார். 

நடிகர் சத்யராஜ்

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம்குறித்த கேள்விக்கு, இத்தகைய பதில் அளித்த நடிகர் சத்யராஜ், `தன் 41 ஆண்டுக்கால சினிமா வாழ்க்கையில் அரசியலுக்கு வர வேண்டுமென்று நினைத்துக்கூட பார்த்தது இல்லை' என்றும் தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க