வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (07/01/2019)

கடைசி தொடர்பு:13:00 (07/01/2019)

`கலவர பூமியாக்குவது கஷ்டமா இருக்கு!' - சபரிமலையில் வேலையைவிட்டுச் சென்ற 37 ஊழியர்கள்

பரிமலையில், பெண்கள் அனுமதி மற்றும் போராட்டங்களைத் தொடர்ந்து, அரவணை தயாரிக்கும் பணியில் இருந்த 37 ஊழியர்கள் தங்கள் வேலையை உதறிவிட்டுச் சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.

சபரிமலை பிரசாதம்

சபரிமலையில், பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தால் பல்வேறு நெருக்கடிகள் அரசுக்கு ஏற்பட்டுள்ளன. இந்த மண்டல மகரவிளக்கு சீசனில், உண்டியல் வருமானம் பெரிய அளவில் சரிந்தது. அதுபோன்று, கோயில் பிரசாதமான அப்பம், அரவணை விற்பனையிலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சபரிமலையில் கடந்த 2-ம் தேதி பிந்து, கனக துர்கா ஆகிய பெண்கள் சந்நிதானத்தில் தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரும் தரிசனம் கண்டார்.

பிரசாதம் கிடைக்கும் இடம்

பெண்களை சந்நிதானத்தில் அனுமதித்த விவகாரத்தைக் கையில் எடுத்து, பா.ஜ.க கேரள மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்திவருகிறது. இந்த நிலையில், சபரிமலையில் பெண்களை தரிசனத்துக்காக அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரவணை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 37 பணியாளர்கள் வேலையை உதறிவிட்டுச் சென்றுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரவணை பிரசாதம் தயாரிக்க 60 பேர், அதை பேக்கிங் செய்வதற்கு 150 பேர் என மொத்தம் 210 தொழிலாளர்கள் பணிபுரிந்துவந்தனர். சபரிமலையில் பெண்களை அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதற்கட்டமாக 24 தற்காலிகத் தொழிலாளிகள் வேலையை உதறிவிட்டுச் சென்றனர்.

கேரளாவில் வன்முறை

'சந்நிதானத்தை கலவர பூமியாக்குவது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது' என கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு, அந்தப் பணியாளர்கள் சென்றனர். இப்போது, மேலும் 13 தொழிலாளர்கள் பணியை உதறிவிட்டுச் சென்றுள்ளனர். அரவணை தயாரிக்கும் பணியில் இருந்து இதுவரை 37 பேர் வேலையை விட்டுச் சென்றுள்ளனர். மகர விளக்கு காலத்தில் அரவணை தயாரித்து  வழங்குவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.