காவல் நிலையம் மீது குண்டு வீசிய ஆர்எஸ்எஸ் பிரமுகர்! - சிசிடிவி-யால் சிக்கினார் | Emergency declared in Nedumangad, Thiruvananthapuram

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (07/01/2019)

கடைசி தொடர்பு:15:10 (07/01/2019)

காவல் நிலையம் மீது குண்டு வீசிய ஆர்எஸ்எஸ் பிரமுகர்! - சிசிடிவி-யால் சிக்கினார்

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகிய இரு பெண்களும், ஜனவரி 2-ம் தேதி சபரிமலை சந்நிதானத்துக்குள் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். இதன்மூலம், பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சபரிமலையில் பெண்கள் வழிபாடு சாத்தியப்பட்டுள்ளது. இருந்தும், பெண்கள் சபரிமலைக்குச் சென்றதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள இந்து அமைப்புகளும், பா.ஜ.க-வினரும் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். 

சபரிமலை கலவரம்

கடந்த 3-ம் தேதி, சபரிமலை கர்ம சமிதி சார்பில் மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் போன்ற பல கட்சியினர் கலந்துகொண்டர். இதில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளையும் ஆர்.எஸ். எஸ் அமைப்பினர் வலுக்கட்டாயமாக மூடினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளும்  கம்யூனிஸ்ட் கட்சியினரும் களத்தில் இறங்கி சில கடைகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளித்தனர்.

குண்டு வீச்சு

இதற்கிடையில், திருவனந்தபுரம் நெடுமாங்காடு பகுதியில் உள்ள காவல் நிலையத்தின்மீது சிலர் வெடிகுண்டு வீசியுள்ளார். குண்டு வீசியவர் தொடர்பாக எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், நேற்று குண்டு வீசிய சிசிடிவி வீடியோவை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், ஒருவர் காவல் நிலையத்தையும் அங்கு நின்றிருந்த காவலர்களையும் குறிவைத்து சில வெடி குண்டுகளை வீசுகிறார். இந்த வீடியோமூலம், குண்டு வீசியவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த பிரவீன் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக காவல் துறையினர் அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.  மேலும், அன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோவையும் காவல் துறையினர் வெளியிட்டு விசாரணை நடத்திவருகின்றனர். 

தொடர் போராட்டங்கள் மற்றும் கலவரம் காரணமாக, திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமாங்காடு மற்றும் வளியமா ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார், மாவட்ட ஆட்சியர் வாசுகி.