வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (07/01/2019)

கடைசி தொடர்பு:18:00 (07/01/2019)

‘15 நிமிடங்கள் கொடுங்கள் உண்மையை நான் வெளிக்கொண்டு வருகிறேன்’ - மோடிக்குச் சவால் விடும் ராகுல்

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்ய செப்டம்பர் மாதம், 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு நிர்ணயித்த விலையைக்காட்டிலும் பல மடங்கு அதிக விலையைப் பா.ஜ.க அரசு வழங்க உள்ளது என்றும், மத்திய அரசின் ஹெச்.ஏ.எல் நிறுவனத்துக்கு வழங்க இருந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளித்தது என்றும் சர்ச்சை எழுந்தது. 

ரஃபேல்

ரஃபேல் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஐந்து மாநில தேர்தலினால் சற்று அமைதிப் பெற்றிருந்த இந்த விவகாரம் தற்போது நாடாளுமன்றத்தில் நடந்துவரும் குளிர் காலக் கூட்டத்தொடரின் மூலம் மீண்டு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில், ‘ ரஃபேல் விவகாரங்கள் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் கூறுவதாகவும் அதனால் அவர் பதவி விலக வேண்டும்’ எனவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதற்கு  ‘ உண்மை தெரியாமல் ராகுல் காந்தி பேசுவதாகவும் அவரின் கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றும் பதிலளித்திருந்தார்.

நிர்மலா சீதாராமன்

இந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல், “ ரஃபேல் விவகாரத்தில் பிரதமரின் தலையீடு இருப்பதைப் பாதுகாப்பு அமைச்சர் கேள்வி கேட்டாரா? 126 விமானங்கள் எப்போது 36 விமானங்களாகக் குறைக்கப்பட்டது. இதை விமானப் படை அதிகாரிகள் தடுத்தார்களா இல்லையா? பாதுகாப்புத் துறை அமைச்சர் நீண்ட நேரமாக நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமரின் தலையீடு உள்ளதா என்ற என் ஒற்றைக் கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை. 

ராகுல் காந்தி

முன்னதாக ஹெச்.ஏ.எல் நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தி செய்ய ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார் ஆனால் இன்று 26,570 கோடி என கூறுகிறார். இதில் எது உண்மை அவர் பொய் சொல்கிறார் என இதிலிருந்து நன்றாகத் தெரிகிறது. விமானங்கள் தொடர்பாக அனில் அம்பானி எதையும் செய்யவில்லை அவருக்கு இந்த பெரிய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஹெச்.ஏ.எல் நிறுவனம் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. அந்த நிறுவனத்துக்கு எந்த ஒப்பந்தமும் வழங்கப்படவில்லை. 

பிரதமர் மோடியுடன் பேச எனக்கு ஒரு 15 நிமிடம் மட்டும் தாருங்கள் அதன்பின் ரஃபேல் விவகாரத்தில் என்ன நடந்தது என்ற உண்மை நாட்டு மக்களுக்குத் தெரியவரும். நான் உண்மையை வெளிக்கொண்டு வருகிறேன்'' எனப் பேசியுள்ளார்.