`நியூசிலாந்தில் வளர்ந்தாலும் இந்தியப் பண்பும் அன்பும் மாறவில்லையே!'- வியந்த புனே போலீஸ் | New Zealand sisters return india to meet cop who save them 1n 1998

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (07/01/2019)

கடைசி தொடர்பு:18:15 (07/01/2019)

`நியூசிலாந்தில் வளர்ந்தாலும் இந்தியப் பண்பும் அன்பும் மாறவில்லையே!'- வியந்த புனே போலீஸ்

'ன்னை சிறு வயதில் பெற்றோர் தத்துக் கொடுத்துவிட்டனர். பெற்றோரைக் கண்டுபிடித்துக் கொடுங்கள்' என்று வெளிநாட்டில் தத்து கொடுக்கப்பட்டவர்கள் கேட்பது வழக்கமானது. நியூசிலாந்தில் இருந்து வந்த இளம் பெண்கள், 'தங்களை மீட்டெடுத்துப் பாதுகாத்த சப்-இன்ஸ்பெக்டரைத் தேடி வந்தது புனே போலீஸ் அதிகாரிகளை வியப்புக்குள்ளாக்கியது. 

சப் இன்ஸ்பெக்டரை சந்திக்க புனே வந்த நியூசி இளம் பெண்கள்

கடந்த 1998-ம் ஆண்டு ஜிம்கானா போலீஸ் நிலையம் அருகே ஷீமா, ரீமா என்கிற சகோதரிகளை பெற்றோர் கைவிட்டுச் சென்றுவிட்டனர். டெக்கான் ஜிம்கானா போலீஸ் நிலையத்தில் டூட்டியில் இருந்த சப் - இன்ஸ்பெக்டர் சர்ஜிராவ் காம்ப்ளே, சிறுமிகளை மீட்டுப் பாதுகாப்பாக போலீஸ் நிலையத்தில் தங்க வைத்துள்ளார். சிறுமிகளின் பெற்றோரை தேடியும் பார்த்தார் காம்ப்ளே. பெற்றோர் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், ஸ்ரீவஸ்த்தவா என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் சிறுமிகளைச் சேர்த்தார். சிறுமிகள் இருவரையும் நியூசிலாந்தைச் சேர்ந்த தம்பதி தத்தெடுத்துள்ளனர். வெலிங்டன் நகரில் வளர்ப்பு பெற்றோருடன் சிறுமிகள் இருவரும் வசித்தனர். இருவரும் நன்கு படித்து ஒருவர் ஆசிரியையாகவும் இன்னொருவர் இன்ஜினீயராகவும் அங்கே பணி புரிந்துவருகின்றனர். 

இந்த நிலையில்தான் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களை மீட்டு ஆதரவளித்த சப்- இன்ஸ்பெக்டரைத் தேடி தங்கள் வளர்ப்பு பெற்றோருடன் ஷீமாவும் ரீமாவும் டெக்கான் ஜிம்கானா போலீஸ் நிலையத்துக்கு இரு நாள்களுக்கு முன் வந்தனர். பணியிலிருந்த  போலீஸ் அதிகாரிகளிடம் விஷயத்தைக் கூறி, 'எங்களைக் காப்பாற்றிய போலீஸ்காரரைப் பார்க்க முடியுமா' என்று வாஞ்சையுடன் கேட்டுள்ளனர். போலீஸார் ஆவணங்களைச் சரி பார்த்தபோது கடந்த 1998-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி காம்ப்ளே சிறுமிகளை மீட்டிருப்பது தெரியவந்தது. ஆனால், காம்ப்ளே சில ஆண்டுகளுக்கு முன்னரே ஓய்வு பெற்று புனேயிலிருந்து வேறு ஊருக்குச் சென்றுவிட்டார். 

தற்போது  போலீஸ் அதிகாரிகள் காம்ப்ளே இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். டெலிபோன் எண்ணையாவது கண்டுபிடித்து தருவதாக நியூசிலாந்து இளம்பெண்களிடம் போலீஸார் உறுதி அளித்துள்ளனர். சம்பவம் குறித்து நினைவுகூரும் சகோதரிகள், 'இந்த போலீஸ் நிலையத்தை எங்கள் வீடு போலவே கருதுகிறோம். தக்க சமயத்தில் எங்களை மீட்டதோடு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து தந்தை ஸ்தானத்தில் இருந்து எங்களைப் பார்த்துக்கொண்டவர் காம்ப்ளே சார்'' என்று நெகிழ்கின்றனர். 

நியூசிலாந்தில் வளர்ந்தாலும் போலீஸ் நிலையத்துக்கு சுடிதார் அணிந்தே இளம்பெண்கள் வந்திருந்தனர்.  நன்றி மறவாமல் சப்-இன்ஸ்பெக்டரை தேடிய இளம் பெண்களைப் பார்த்து, 'எங்கே வளர்ந்தாலும் தாய்நாட்டு பண்பு மாறவில்லை' என்று போலீஸார் மெச்சிக் கொண்டனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க