வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (07/01/2019)

கடைசி தொடர்பு:19:30 (07/01/2019)

மக்களவையில் ஒலித்த `நான் ஆணையிட்டால்’ பாடல்! - எம்.ஜி.ஆர் வேடத்தில் நாடாளுமன்றத்துக்கு வந்த எம்.பி

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் போல் வேடமணிந்து நாடாளுமன்றத்துக்கு வந்த ஆந்திர எம்.பி, மக்களவையில் `நான் ஆணையிட்டால்’ பாடலையும் ஒலிக்கவிட்டார். 

எம்.ஜி.ஆர் வேடமிட்டு வந்த ஆந்திர எம்.பி

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி நரமல்லி சிவபிரசாத், நாடாளுமன்றத்துக்குப் பல்வேறு வேடங்களில் வந்து கவனம் ஈர்ப்பவர். குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், எம்.ஜி.ஆர் வேடமணிந்து கையில் சாட்டையுடன் நாடாளுமன்றத்துக்கு அவர் இன்று வந்தார். மக்களவையின் கேள்வி நேரத்தின்போது, அவையின் மையப்பகுதிக்கு வந்த அவர் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி கோஷமிட்டார். அப்போது, அமளி ஏற்பட்டதால் அவையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 12.30 மணி வரை ஒத்திவைத்தார். அதேபோல், எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற `நான் ஆணையிட்டால்’ பாடலையும் டேப் ரெக்கார்டர் மூலம் அவர் ஒலிக்கவிட்டார். 

நாடாளுமன்றம்

நேரமில்லா நேரத்தின்போது அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விதித்ததாக மற்ற 3 எம்.பி-க்களுடன் சேர்ந்து சிவபிரசாத்தையும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், எம்.பி-க்கள் சிலர் சிவபிரசாத்துடன் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த இடத்துக்கு வந்த பா.ஜ.க எம்.பி அனுராக் தாக்குர், சிவபிரசாத்தின் டேப் ரெக்காடரை நிறுத்தினார். சமாஜ்வாதிக் கட்சியின் முலாயம் சிங் யாதவ் மற்றும் காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரிடம் அவர் பேசிக்கொண்டிருந்தார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி அம்மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாகத் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி-க்கள் சிலரை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.