வெளியிடப்பட்ட நேரம்: 09:43 (08/01/2019)

கடைசி தொடர்பு:10:34 (08/01/2019)

ரயிலை மறித்த தொழிலாளர்கள்! - வட மாநிலங்களில் விஸ்வரூபம் எடுத்த பாரத் பந்த்

விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, வேலை வாய்ப்பின்மை, புதிய ஓய்வூதியத்தை திரும்பப் பெறவேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கத்தினர் இன்று மற்றும் நாளையும் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். அதன்படி இன்று காலை முதல் பல்வேறு மாநிலங்களில் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்திவருகின்றனர். 

போராட்டம்

இதில் ஐஎன்டியூசி, ஏஐடியூசி, ஹெச்.எம்.எஸ், சிஐடியூ உள்ளிட்ட 10 தொழிற்சங்கத்தினர் இணைந்து போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தியா முழுவதும் சுமார் 20 கோடி பேர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தொழிற்சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கம், அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், மின் வாரிய சங்க ஊழியர்கள் போன்ற பலர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மத்திய தொழிற்சங்கத்தின் போராட்டத்துக்கு நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

போராட்டம்

தமிழ்நாட்டிலும் பல்வேறு அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக முன்னதாக அறிவித்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்றும், அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. இருந்தும் தமிழகத்தில் இயக்கப்படும் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படும், பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என்பதற்காக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. 

போராட்டம்

மத்திய தொழிற்சங்கத்தினரின் போராட்டம் காரணமாக ஒடிஷா, மைசூர் ஆகிய நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓசூரில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள், ஓசூர்- தமிழ்நாடு எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். 

அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தி மற்றும் மேற்கு வங்க மாநிலம் ஹவுரா ஆகிய இடங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் இணைந்து, ரயில் தண்டவாளத்தில் நின்று தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்திக் கூச்சலிட்டுவருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னதாக மேற்கு வங்க அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று ஊழியர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் போராட்டம் நடத்திய பல தொழிலாளர்களை போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்துவருகின்றனர்.