வெளியிடப்பட்ட நேரம்: 18:14 (09/01/2019)

கடைசி தொடர்பு:20:34 (09/01/2019)

மான்சாண்டோவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததா உச்சநீதிமன்றம்... உண்மை என்ன?

`விதைகள் அனைவருக்கும் பொதுவானது' என்பதுதான் இந்திய காப்புரிமைச் சட்டத்தின் முக்கிய சாராம்சம். அதைக் காப்புரிமை கொடுத்து தனியார் மயமானால் விவசாயிகள் விதைகளுக்காக விதைச் சந்தையைத்தான் நம்பியிருக்க வேண்டும் என்பது வேளாண் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

மான்சாண்டோவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததா உச்சநீதிமன்றம்... உண்மை என்ன?

ல ஆண்டுகளாகவே இந்திய விவசாயத்தில் சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் விஷயம் `மரபணு மாற்றப் பயிர்கள்'. இது நல்லதா கெட்டதா என்று கேள்வி கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில், 2002-ம் ஆண்டு மான்சாண்டோவின் பி.டி பருத்தி முதல் மரபணு மாற்றப் பயிராக இங்கே அறிமுகம் செய்யப்பட்டது. `புழுத் தாக்குதலைத் தவிர்த்து அதிகமான விளைச்சல் தருகிறது' என்ற ஆசை வார்த்தைகள் காட்டியே இப்பயிர்கள் விவசாயிகள் இடத்தில் பரவலாக்கப்பட்டது. அதன் விளைவு இப்போது இந்தியா முழுவதும் 95 சதவிகிதம் பி.டி பருத்திதான் பிரதான பயிர். பி.டி பருத்தியால் வாழ்விழந்த விவசாயிகள் இந்தியாவில் ஏராளம். பூச்சித் தாக்குதல், அதிக செலவினம் என அவர்கள் பட்டபாடுகள் சொல்லிமாளாது. பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், விஞ்ஞானி பி.சி.கேசவனுடன் இணைந்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி குறித்து வெளியிட்ட ஓர் அறிக்கைகூட கடந்த சில நாள்களுக்கு முன்னர் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. 

மான்சாண்டோ

இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மரபணு விதைகளை விற்பனை செய்யும் மான்சாண்டோ நிறுவனம் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி `இதைப் பற்றி எங்களால் கருத்து தெரிவிக்க முடியாது. நீங்கள் உயர் நீதிமன்றத்திலேயே பார்த்துக்கொள்ளுங்கள்' எனத் தீர்ப்பளித்து உத்தரவிட்டிருக்கிறார். இதனால் மான்சாண்டோ தரப்பு மிகுந்த ஏமாற்றத்துடன் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடப் போகிறது. அது என்ன வழக்கு... அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? வாருங்கள் பார்க்கலாம்.

பன்னாட்டு நிறுவனமான மான்சாண்டோ, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஹைபிரிட் சீட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் 40 டீலர்களுக்கு பருத்தி விதைகளை விற்பனை செய்கிறது. அவை அங்கிருந்து சில்லறை வியாபாரிகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில், ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த நுஜிவீடு என்ற விதை நிறுவனம், இந்தியாவில் உள்ள காப்புரிமை சட்டங்களின்படி, மான்சாண்டோ தனது மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்குக் காப்புரிமை கேட்க முடியாது என்று தெரிவித்து காப்புரிமை தொகை கொடுக்க மறுத்து வந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் டெல்லி உயர் நீதிமன்றத்துக்குச் சென்றது. அங்கும் காப்புரிமை பெற முடியாது எனத் தீர்ப்பு வரவே இறுதியாக வேறு வழியின்றி உச்ச நீதிமன்றத்தை நாடியது மான்சாண்டோ.

கடந்த 8-ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், `மான்சாண்டோ நிறுவனம் தனது மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளுக்குக் காப்புரிமை கோருகிறது. ஆனால், இதைப் பற்றி நாங்கள் கருத்து சொல்ல விரும்பவில்லை. இதை உயர் நீதிமன்றத்திலேயே பார்த்துக் கொள்ளவும்' எனத் தீர்ப்பளித்திருக்கிறது.

மான்சாண்டோ

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்துவிட்டன எனச் செய்திகள் பரவின. இதனால் இந்திய பங்குச் சந்தைகளில் மான்சாண்டோ நிறுவனப் பங்குகள் உயரத் தொடங்கின. ஆனால், உண்மையான தீர்ப்பு இதை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்ததுதான். காப்புரிமை பிரச்னை மற்றும் அனுமதி விவகாரத்தால்தான் மான்சாண்டோ நிறுவனம் தனது மரபணு மாற்றப்பட்ட புதிய தொழில்நுட்பங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தாமல் இருந்து வருகிறது. இனி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின் மான்சாண்டோ நிறுவனம் இந்தியா மீது கவனம் செலுத்தத் தொடங்கும்.

`விதைகள் அனைவருக்கும் பொதுவானது' என்பதுதான் இந்திய காப்புரிமைச் சட்டத்தின் முக்கிய சாராம்சம். அதைக் காப்புரிமை கொடுத்து தனியார் மயமானால் விவசாயிகள் விதைகளுக்காக விதைச் சந்தையைத்தான் நம்பியிருக்க வேண்டும் என்பது வேளாண் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

 அறச்சலூர் செல்வம்இதுபற்றி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம், ``கடந்த 8-ம் தேதி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்றம் நாங்கள் தீர்ப்பு சொல்ல ஏதுமில்லை. இதை உயர் நீதிமன்ற அமர்விலேயே பார்த்துக்கொள்ளுங்கள் எனத் தெளிவாகச் சொல்லிவிட்டது. ஆனால், மான்சாண்டோ நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றம் காப்புரிமைக்கு அனுமதி கொடுத்துவிட்டது எனச் செய்திகள் பரப்பப்பட்டன. அந்தச் செய்திகள் உண்மையானது அல்ல. மீண்டும் மான்சாண்டோ நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் நடைபெறப்போகிறது. விதைகள் விவசாயிகளின் பொதுவுடைமை. அதற்கு எந்த நிறுவனமும் காப்புரிமை கோர முடியாது. தீர்ப்பு வெளியான நாளிலேயே மத்திய வேளாண் அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பி.டி பருத்தி அதிக விளைச்சலைக் கொடுத்திருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பி.டி பருத்தி விளைச்சலைக் கொடுத்திருப்பது உண்மைதான். ஆனால், அதற்குக் காரணம் பி.டி தொழில்நுட்பம் கிடையாது. அறிவியலாளர்களும், விஞ்ஞானிகளும் முன் வைக்கும் கருத்து புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் என்பதுதான். சாதாரண பருத்தியே நீர் அதிகமாகவும், விதை நேர்த்தியும் செய்தால் 30 சதவிகித மகசூலை அதிகமாகக் கொடுத்துவிடும். மகசூலுக்குக் காரணம் பி.டி தொழில்நுட்பம்தான் என்பதும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. மத்திய அரசு, பி.டி விதைகளைக் கொண்டு வருவதில் ஆர்வமாக இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது" என்றார்.

பி.டி விதைகள் பற்றிய விவகாரம் எப்போது எழுந்தாலும் ஒரு முடிவு கிடைக்காமல் நீண்டுகொண்டே செல்கிறது. 


டிரெண்டிங் @ விகடன்