வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (10/01/2019)

கடைசி தொடர்பு:08:03 (10/01/2019)

‘தனியார் நிகழ்ச்சியில் வரம்புமீறிய ஹர்திக் பாண்ட்யா’ - 24 மணி நேரத்தில் பதிலளிக்க பிசிசிஐ உத்தரவு

பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'காபி வித் கரண்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகின்றார். அந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக, இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான கே.எல். ராகுல் மற்றும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆகிய இருவரும் சமீபத்தில் பங்கேற்றிருந்தனர்.


கரண் ஜோஹர்

அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, சில சர்ச்சைக்குரிய பதில்களை அளித்துள்ளனர். சிறந்த கிரிக்கெட் வீரர் சச்சினா? விராட் கோலியா... என்ற கேள்விக்கு, உடனடியாக கோலி எனப் பதிலளித்துள்ளனர். அதேபோல, பெண்களைப் பற்றிப் பேசும்போது தவறான கருத்துகளை வெளிப்படுத்தினர், பாலியல் தொடர்பான கருத்துகளை வெளிப்படையாகப் பேசியதால், இது பெரிய அளவில் சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, பல்வேறு தரப்பைச் சார்ந்தவர்களும் இதை விமர்சித்தனர்.இதைத் தொடர்ந்து, தான் கூறிய கருத்து யாருடைய மனதையாவது காயப்படுத்தியிருந்தால், மன்னித்து விடுமாறு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார் ஹர்திக் பாண்ட்யா.

ஹர்திக் பாண்டியா


இந்நிலையில், இதுகுறித்துப் பேசிய பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய், 'கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான கே.எல். ராகுல் மற்றும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா  ஆகியோரின்  இந்த சர்ச்சைகுறித்து 24 மணி நேரத்திற்குள் விளக்கச் சொல்லி, இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இனி, இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி வழங்குவதில் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக பரிசீலனைசெய்துவருகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.