வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (10/01/2019)

கடைசி தொடர்பு:12:00 (10/01/2019)

‘2 மணி நேரம் சந்நிதான பூஜைகளில் பங்கேற்றேன்’- முதியவர் வேடத்தில் சபரிமலை சென்ற இளம் பெண்

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, சபரிமலை கோயிலுக்குச் செல்ல முயலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஒருபுறம், பெண்கள் கோயிலுக்குள் செல்ல முயல்வதும், மறுபுறம் அவர்களை பக்தர்கள் தடுப்பதும் தொடர் கதையாக நடைபெற்றுவருகிறது. 

சபரிமலை

இதற்கிடையில், கடந்த 2-ம் தேதி, கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகிய இரு பெண்களும் சபரிமலை சந்நிதானத்துக்குள் சென்று ஐயப்பனைத் தரிசனம்செய்தனர். இவர்கள் கோயிலுக்குள் சென்றதைத் தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் போராட்டக் களமாக மாறியுள்ளது. இரு பெண்கள் கோயிலுக்குள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவின் பல இடங்களில் இன்னும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. 

மஞ்சு

இந்நிலையில், கேரள மாநிலம் சாத்தனூரைச் சேர்ந்த மஞ்சு என்ற 36 வயதான இளம் பெண், முதியவர் போல வேடமணிந்து, சபரிமலைக்குச் சென்று ஐயப்பனைத் தரிசனம்செய்துள்ளார். இதை, ‘சபரிமலையை நோக்கிய மறுமலர்ச்சி கேரளா' என்ற அமைப்பு தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில், தான் சபரிமலை சென்றதை மஞ்சு ஒப்புக்கொண்டுள்ளார். 

இளம் மஞ்சு

வீடியோவில் பேசியுள்ள அவர், “ நான் ஜனவரி 8-ம் தேதி சபரிமலைக்குச் சென்றுவந்தேன். திருச்சூரில் இருந்து பேருந்து வழியாகவே சென்றேன். என்னை இளம் பக்தர் என யாரும் தடுக்கவில்லை. பிற பக்தர்களைப் போலவே நானும் அமைதியான முறையில் இருமுடி கட்டுடன் கோயிலுக்குள் சென்று ஐயப்பனைத் தரிசனம்செய்தேன். நான் கோயில் சந்நிதானத்துக்குள்  இரண்டு மணிநேரம் இருந்து பல்வேறு பூஜைகளில் கலந்துகொண்டேன்” என்று தெரிவித்துள்ளார். 

இவர், போலீஸாரின் உதவியை நாடாமல் தாமாக மலை ஏறிச் சென்றுள்ளார். அக்டோபர் மாதமும் இவர் சபரிமலைக்குச் செல்ல பம்பை வரை சென்று, மலை ஏற முடியாமல் திரும்பியுள்ளார். இதன்காரணமாகவே, தற்போது மாறு வேடத்தில் மீண்டும் கோயிலுக்குள் சென்றுள்ளார்.