தீயணைப்புத் துறைக்கு மாற்றப்பட்ட அலோக் வர்மா! - சி.பி.ஐ இயக்குநர் விவகாரத்தில் அடுத்த திருப்பம் | Alok Verma move to Director general Fire services department

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (10/01/2019)

கடைசி தொடர்பு:21:20 (10/01/2019)

தீயணைப்புத் துறைக்கு மாற்றப்பட்ட அலோக் வர்மா! - சி.பி.ஐ இயக்குநர் விவகாரத்தில் அடுத்த திருப்பம்

சி.பி.ஐ இயக்குநர் பதவியிலிருந்து தீயணைப்புத் துறை இயக்குநராக அலோக் வர்மாவை பணியிட மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. 

ராகேஷ் அஸ்தானா - அலோக் வர்மா

சி.பி.ஐ தலைவராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறிய விவகாரம் கடந்த அக்டோபரில் விஸ்வரூபமெடுத்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது. அதேபோல், அலோக் வர்மாவுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களையும் மத்திய அரசு பறித்தது. மேலும், மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி நாகேஸ்வர ராவை சி.பி.ஐ-யின் இடைக்காலத் தலைவராகவும் நியமித்தது. 

அலோக் வர்மா

இந்த நிலையில், நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் முறையிட்டார். அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ததுடன், சி.பி.ஐ-யின் இயக்குநராக அலோக் வர்மா செயல்படத் தடையில்லை என்று உத்தரவிட்டது. மேலும், அலோக் வர்மா மீது எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய நியமனக் குழுதான் எடுக்க வேண்டும்  என்றும், ஒருவாரத்தில் அந்தக் குழுவைக் கூட்டி முடிவெடுக்கலாம் என்றும் உத்தரவிட்டது. அந்தக் குழுவில் தனது சார்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி இடம்பெறுவார் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்திருந்தார். இதையடுத்து, சி.பி.ஐ-யின் இயக்குநராக அலோக் வர்மா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். மீண்டும் பதவியேற்றுக் கொண்டவுடன், இடைக்கால இயக்குநராக செயல்பட்ட நாகேஸ்வர ராவ் பிறப்பித்த உத்தரவுகள் மற்றும் பணியிட மாற்ற உத்தரவுகளை ரத்து செய்தார் அலோக் வர்மா. 

நாகேஸ்வர ராவ்


இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பிரதமர் மோடி தலைமையில் நீதிபதி ஏ.கே.சிக்ரி மற்றும் காங்கிரஸ் எம்.பி மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இடம்பெற்றிருக்கும் நியமனக் குழுவின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் அலோக் வர்மாவை சி.பி.ஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்குவதாக முடிவு செய்யப்பட்டது. மேலும், அவரை தீயணைப்புத் துறையின் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கவும் அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. சி.பி.ஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை நிக்க மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இருப்பினும், 2-1 என்ற அடிப்படையில் பிரதமர் மோடி மற்றும் நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோரின் முடிவின்படி அலோக் வர்மா தீயணைப்புத் துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இம்மாத இறுதியில் ஓய்வுபெறும் அலோக் வர்மா, அதுவரை அந்தப் பதவியில் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.