வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (11/01/2019)

கடைசி தொடர்பு:19:35 (11/01/2019)

`இதுவரை 30 பெண்கள் சபரிமலை செல்ல முயன்றுள்ளனர்!' - அறிக்கை தாக்கல் செய்த கேரள முதல்வர்

சபரிமலைக்குப் பெண்கள் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, சபரிமலை கோயிலுக்குச் செல்ல முயலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஒருபுறம், பெண்கள் கோயிலுக்குள் செல்ல முயல்வதும், மறுபுறம் அவர்களைப் பக்தர்கள் தடுப்பதும் தொடர்கதையாக நடைபெற்றுவருகிறது. 

சபரிமலை

இதற்கிடையில், கடந்த 2-ம் தேதி, கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகிய இரு பெண்களும் சபரிமலை சந்நிதானத்துக்குள் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். இவர்கள் கோயிலுக்குள் சென்றதைத் தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் போராட்டக் களமாக மாறியுள்ளது. இதை எதிர்த்துக் கடந்த 3-ம் தேதி சங்பரிவார் அமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் போராட்டம் கலவரமாக மாறியது. 

பினராயி விஜயன்

இந்நிலையில் கலவரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அம்மாநில ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அதில், ‘உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, கேரளாவில் மொத்தம் 2012 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 10,561 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் 9,489 பேர் சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள். 

சபரிமலை கலவரம்

இதுவரை 30 பெண்கள் சபரிமலைக்குச் செல்ல முயன்று போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்து பேர் பெண் பத்திரிகையாளர்கள். பெண்கள் சபரிமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்நிதானத்துக்கு அருகில் நடந்த போராட்டத்தில் 17 பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளனர் மற்றும் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி 3-ம் தேதி இரு பெண்கள் சபரிமலைக்குச் சென்ற பின்பு நடந்த கலவரத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 2.32 கோடி ரூபாய்க்கு பொது சொத்துகள் சேதமடைந்துள்ளன’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.