வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (12/01/2019)

கடைசி தொடர்பு:13:05 (12/01/2019)

``காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து”- ராகுல் காந்தி அதிரடி

ஆந்திரப் பிரதேச மாநிலத்தை இரண்டு மாநிலங்களாகப்  பிரிக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி ஆந்திரப் பிரதேசத்திலிருந்து பிரித்து தெலங்கான என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது.

சந்திரபாபு நாயுடு, மோடி

இந்த மாநிலப் பிரிப்பு நடவடிக்கையால், ஆந்திராவுக்கு வருவாயில் ஏற்பட்டுள்ள இழப்பு மற்றும் புதிய உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள வேண்டியதன் தேவைகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஆந்திராவைச் சார்ந்த பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆந்திரா குறித்து ராகுல் காந்தி

கடந்த தேர்தலில் பி.ஜே.பியோடு கூட்டணி வைத்திருந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்து கூட்டணியிலிருந்து வெளியேறினார். ``தென் மாநிலங்களின் வரியை வைத்துதான் வடமாநிலங்கள் செழிப்பாய் வாழ்கின்றன” என மத்திய அரசுக்கு எதிராகப் பேசி வந்தார். நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானத்தையும் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் கொண்டு வந்தனர்.

 

கடந்த மாதம் நடந்த தெலங்கான சட்டமன்றத் தேர்தல் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸோடு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள்கள் சுற்றுப் பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கு தொழிலாளர்கள் காலனியில் இந்தியர்களைச் சந்தித்துப் பேசியவர், ``பல்வேறு மாநிலங்களிலிருந்து இங்கு வந்து உழைத்து. இந்தியாவுக்கு பெரும் உதவி செய்து வருகின்றீர்கள். துபாயில் உள்ள பெரிய பெரிய கட்டடங்கள், உயர்தரமான விமான நிலையங்கள் இவற்றுக்குப் பின்னால் உங்களின் உழைப்பு உள்ளது . உங்களின் ரத்தம் வியர்வை அல்லாமல் இந்த நகரத்தைக் கட்டமைத்திருக்க முடியாது. உங்களை நினைத்து இந்தியா பெருமிதம் அடைகின்றது”  என்றார்.


சந்திரபாபு நாயுடு, ராகுல் காந்தி

இந்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தலைப் பற்றி பேசிய ராகுல் காந்தி `` 2019-ம் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்கு உடனடியாக சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்'' என்றார்.