வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (12/01/2019)

கடைசி தொடர்பு:17:10 (12/01/2019)

தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் - மருத்துவமனையிலேயே திருமணம் செய்துவைத்த பெற்றோர்

ஹைதராபாத்தில் ஒரு காதல் ஜோடிக்கு சினிமா பாணியில் மருத்துவமனையில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. 

திருமணம்

ஹைதராபாத்திலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ளது விக்ரபாத். அங்கு 19 வயதான ரேஷ்மா என்ற பெண்ணும் 21 வயதான நவாஸ் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். ரேஷ்மாவின் சகோதரிக்கும் நவாஸின் சகோதரருக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அதில் சந்தித்த இவர்கள் அப்போதிலிருந்து காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் இந்த விஷயம் இருவரின் குடும்பத்துக்கும் தெரியவர திருமணத்துக்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

இதனால் வேதனையடைந்த ரேஷ்மா தன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த அவரின் குடும்பத்தினர் உடனடியாக ரேஷ்மாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவரிடம் காண்பிக்க பூச்சி மருந்தையும் உடன் கொண்டுவந்துள்ளனர். 

அவரைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்த நவாஸ், மருத்துவரிடமிருந்த ரேஷ்மா குடித்த அதே பூச்சி மருந்தைத் திருடி தானும் குடித்துள்ளார். பிறகு அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தை அடுத்து இருவரும் இணைந்தே வாழ வேண்டும் என முடிவெடுத்த குடும்பத்தினர் இன்று மருத்துவமனையில் வைத்தே இருவருக்கும் திருமணம் செய்துவைத்துள்ளனர். இந்தச் செய்தி தற்போது சமூகவலைதளங்களில் அதிக கவனம் ஈர்த்துள்ளது.