வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (12/01/2019)

கடைசி தொடர்பு:20:27 (12/01/2019)

பிசினஸ் கிங் ரத்தன் டாடா திருமணம் செய்யாதது ஏன்?

பிசினஸில் ஈடுபட்டு கோடிகளைக் குவித்த ரத்தன் டாடா திருமணப் பந்தத்துக்குள் நுழையாமல் போனது ஏன்?

பிசினஸ் கிங் ரத்தன் டாடா திருமணம் செய்யாதது ஏன்?

நாட்டின் மிகப் பெரிய தொழில்நிறுவனம் டாடா. இந்த நிறுவனத்தைப் பல ஆண்டுகளாகக் கட்டி ஆண்டவர் ரத்தன் நெவல் டாடா. இவர் தலைவராக இருந்த காலத்தில்தான் டாடா நிறுவனம் பல ஏற்றங்களைக் கண்டது. தற்போது இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கும் மேல். 1937-ம் ஆண்டு பிறந்த ரத்தன் டாடாவின் இளமைக் காலம் சோகம் நிறைந்தது. 1940-ம் ஆண்டு ரத்தனின் தந்தை நெவல் ஹோம் சூஜி தாயார் சூனாவை விவாகரத்து செய்தார். இதனால் ரத்தன் பாட்டியிடம் வளர்ந்தார். 

ரத்தன் டாடா

நியூயார்க்கில் கார்னெல் பல்கலை இன்ஜினீயரிங், ஹார்வர்டில் பிசினஸ் படிப்பு. ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழிற்சாலையில் 1971-ம் ஆண்டு வரை பணி. பின்னர், 1991-ம் ஆண்டு டாடா குழுமத் தலைவரானார். தொலைநோக்குப் பார்வை கொண்ட இவரின் தலைமையின் கீழ் டாடா நிறுவனம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது. டாடா குழுமத்தின் டி.சி.எஸ் நிறுவனம் உலகின் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றாக உயர்ந்தது.

பிரிட்டனின் புகழ்பெற்ற ஜாக்குவார், லேண்ட் ரோவர், கோரஸ், டெட்லி போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கியது. பிரிட்டன் ராணியே தற்போது இந்தியருக்குச் சொந்தமான நிறுவனம் தயாரிக்கும் கார்களை விரும்பிப் பயன்படுத்துகிறார். 1998-ம் ஆண்டு அறிமுகமான டாடா இண்டிகா இந்திய சாலைகளில் கோலோச்சியது. இது டாடாவின் கனவு கார்களில் ஒன்று. 'மக்களின் கார்' என்று சொல்லப்பட்ட 'நானோ' இவரின் பிரைன்சைல்ட். இப்படி... பிசினஸில் கொடிகட்டிப் பறந்த ரத்தன் நெவல் டாடாவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சியான ஒன்றாக அமையவில்லை. காதலித்த 4 பெண்களையுமே வெவ்வேறு காரணங்களால் அவரால் கரம் பிடிக்க முடியாமல் போனது. 

ரத்தன் டாடா

இந்தியா- சீனா போரும் ரத்தன் திருமணம் நடக்காததற்கு ஒரு காரணமாக இருந்துள்ளது. அமெரிக்காவில் படித்த ரத்தன் அங்கேயே ஐ.பி.எம் நிறுவனத்தில் சில காலம் பணிபுரிந்தார். அப்போது, அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவரை விரும்பியுள்ளார். 1962-ம் ஆண்டு ‘அவரை வளர்த்த பாட்டியின் உடல் நிலை மோசமானதால் ரத்தன் இந்தியா திரும்பினார். தன்னைத் தொடர்ந்து அந்தப் பெண்ணையும் இந்தியாவுக்கு வருமாறு ரத்தன் அழைத்தார். இந்தச் சமயத்தில் இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. அமெரிக்க ஊடகங்கள் பெரும் போராகச் சித்திரித்து செய்திகள் வெளியிட்டு வந்தன. இதனால், பயந்துபோன அமெரிக்கப் பெண், ரத்தனை திருமணம் செய்ய மறுத்துள்ளார். அமெரிக்காவில் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். ரத்தன் முதல் காதல் இப்படித்தான் தோல்வியில் முடிந்தது. 

`திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? ' என்ற கேள்விக்கு, நான்கு முறை திருமணம் கைகூடியதாகவும்,  ஏதோ ஒரு காரணமாக திருமணம் தடைப்பட்டதாகவும், நான்கு முறை காதலில் விழுந்ததாகவும் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரத்தன் டாடா குறிப்பிட்டிருந்தார்.

ரத்தன் டாடா போல லதா மங்கேஷ்கரும் திருமண்ம் செய்யவில்லை

ரத்தன் டாடா மட்டுமல்ல பல முக்கிய பிரபலங்கள் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துள்ளனர். இந்திய அணுசக்தி துறையின் தந்தையாகக் கருதப்படும் ஹோமி பாபா திருமணம் செய்யாமல்தான் வாழ்ந்தார். 56 வயதில் விமான விபத்தில் இவர் இறந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் திருமணம் செய்துகொள்ளவில்லை. அரசியலில் ஈடுபட்டு நாட்டுக்குச் சேவை புரிய திருமணம் தடையாக இருக்குமென்று வாஜ்பாய் கருதினார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் திருமண பந்தத்துக்குள் நுழையவில்லை. இசைக்குயில் லதா மங்கேஷ்கர், காந்தியவாதி அன்னா ஹசாரே, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோரும் திருமணம் செய்யாமல்தான் வாழ்கின்றனர். அரசியல் வி.ஐ.பி.-க்களில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இன்னும் பேச்சிலர்தான்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்