பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு! - குடியரசுத் தலைவர் ஒப்புதல் | president gave approval for New reservation bill

வெளியிடப்பட்ட நேரம்: 19:48 (12/01/2019)

கடைசி தொடர்பு:19:48 (12/01/2019)

பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு! - குடியரசுத் தலைவர் ஒப்புதல்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ராம்நாத்
 

பொதுப்பிரிவினரில் பொருளாதாரரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீட்டை  அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ளது.  இதற்கான மசோதா, மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார். 

பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்தின்படி ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள், 5 ஏக்கருக்குக் குறைவாக விவசாய நிலம் வைத்திருப்பவர்கள், 1000 சதுர அடிக்குக் குறைவாக வீடு வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நகராட்சிக்குட்பட்ட இடத்தில் 1000 சதுர அடிக்குக் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள், நகராட்சி அல்லாத இடத்தில் 2000 சதுர அடிக்கு வீட்டு மனை வைத்திருப்பவர்கள் ஆகியோர், இந்த இடஒதுக்கீட்டுக்குத் தகுதியானவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 

மோடி
 

மத்திய அரசின் இந்த நகர்வுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுகிறது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், தேர்தல் நேரத்தில் இதை அறிவித்தது பா.ஜ.க-வின் சொந்த ஆதாயத்துக்காகத்தான் என விமர்சித்துள்ளன. தி.மு.க, பா.ம.க, வி.சி.க உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள், முற்பட்ட வகுப்பினர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  

இந்நிலையில் இந்தச் சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத்தலைவர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  ஒப்புதல் அளித்துள்ளார்.   நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்த அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டதும், இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க