மோசடி வழக்கில் நளினி சிதம்பரத்தை கைது செய்ய  தடை -சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! | Madras HC on Nalini Chidambaram saradha case issue

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (13/01/2019)

கடைசி தொடர்பு:08:00 (13/01/2019)

மோசடி வழக்கில் நளினி சிதம்பரத்தை கைது செய்ய  தடை -சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சாரதா சிட்பண்ட் நிறுவனத்தில் மோசடி வழக்கில் விசாரணை நடத்த வந்த சி.பி.ஐ இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திற்கு தொடர்பு  இருப்பதாகக் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது . இந்நிலையில் நளினி சிதம்பரத்தை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ப.சிதம்பரம்

மேற்கு வங்காளத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சாரதா சிட்பண்ட் நிறுவனத்தின் மீது 30,000 கோடி ரூபாய் மக்களின் பணத்தை மோசடி செய்தது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார்.  

நளினி சிதம்பரம்

இந்த வழக்கை சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே சுதிப்தா சென்-னிடம் சி.பி.ஐ நடத்திய விசாரணையில், “முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் கொல்கத்தா வரும்போதெல்லாம் அவருக்குக் கட்டணம் வழங்கியதாகவும், அவர் தங்குவதற்கான ஐந்து நட்சத்திர ஓட்டல் செலவையும் நானே ஏற்றுக்கொண்டதாகவும் கூறியிருந்தார்.

மேலும், என்னுடைய நிதி நிலைமை குறித்து தெரிந்துகொள்ளாமல், மனோரஞ்சனாஸ் நிறுவனத்தில் 42 கோடி ரூபாய் முதலீடு செய்யுமாறு நளினி சிதம்பரம் அழுத்தம் கொடுத்தார் என்றும் கூறியிருந்தார். தொலைக்காட்சி வாங்குவது தொடர்பான சட்ட உதவிகளுக்காக நளினி சிதம்பரத்துக்கு ரூ.1.26 கோடி வழங்கப்பட்டது” என வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த நிலையில் கொல்கத்தா நீதிமன்றத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நளினி சிதம்பரம் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது .

சென்னை உயர் நீதிமன்றம்

இதனைத் தொடர்ந்து சாரதி நிதி நிறுவன வழக்கு தொடர்பாக தன்னைக் கைது செய்யத் தடைவிதிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக நளினி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்துள்ளது.