`உங்கள் மகளைப் பாதுகாக்க என்ன வேண்டுமோ, அதைச் செய்துகொள்ளுங்கள்’ - கெஜ்ரிவாலை பதறவைத்த இ-மெயில் | Arvind Kejriwal receives email threat that the CM’s daughter will be kidnapped

வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (13/01/2019)

கடைசி தொடர்பு:10:45 (13/01/2019)

`உங்கள் மகளைப் பாதுகாக்க என்ன வேண்டுமோ, அதைச் செய்துகொள்ளுங்கள்’ - கெஜ்ரிவாலை பதறவைத்த இ-மெயில்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளைக் கடத்த போவதாக வந்த இ-மெயிலினால் அவரின் மகளுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்திய தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அலுவலகத்துக்குக் கடந்த 9-ம் தேதி ஒரு மெயில் வந்துள்ளது அதில், ‘ உங்களின் மகளைக் கடத்த போகிறோம். அவரைப் பாதுகாக்க என்ன வேண்டுமோ செய்துகொள்ளுங்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாக டெல்லி காவலர்கள் தெரிவித்துள்ளனர். 

மெயில்

இதனையடுத்து உடனடியாக முதல்வரின் மகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் அவருடனேயே இருக்க ஒரு கான்ஸ்டபிள் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த கான்ஸ்டபிள், முதல்வரின் மகள் எங்கு சென்றாலும் உடன் சென்று அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா குருக்ராமில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 

இது பற்றி பேசிய காவல்துறை அதிகாரி, “இந்த மெயில் தொடர்பாக டெல்லி சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருந்தும் இது குறித்து முதல்வர் தரப்பில் இருந்து எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை. அன்றைய தினம் இதேப் போன்று மூன்று, நான்கு மெயில்கள் கெஜ்ரிவால் அலுவலகத்துக்கு வந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கெஜ்ரிவாலின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு வழங்கவும் வேண்டும். குறிப்பாக அவரின் மகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மெயில் வந்த பின்னர் கெஜ்ரிவாலோ அவரது குடும்பத்தாரோ தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்கவில்லை. நாங்களாகவே அவரின் மகளுக்குப் பாதுகாப்பு வழங்கியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.