`பா.ஜ.க-வை தனியாகவே வீழ்த்துவோம்' - உத்தரப்பிரதேச அரசியலில் திடீர் ட்விஸ்ட்! | Congress to contest all 80 seats in UP

வெளியிடப்பட்ட நேரம்: 06:47 (14/01/2019)

கடைசி தொடர்பு:07:41 (14/01/2019)

`பா.ஜ.க-வை தனியாகவே வீழ்த்துவோம்' - உத்தரப்பிரதேச அரசியலில் திடீர் ட்விஸ்ட்!

உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடக் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

அகிலேஷ் யாதவ் - மாயாவதி

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பீகாரில் பா.ஜ.க - நிதிஷ் குமாரின் ஜனதா தளம் இடையே தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது. இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தில் பலமான பா.ஜ.க-வை எதிர்க்க சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை வெளியேற்றிவிட்டு அகிலேஷும் மாயாவதியும் தனியாகக் கூட்டணி வைத்துள்ளனர். இருகட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். இதை உறுதிப்படுத்தியுள்ள இரு தலைவர்களும் நேற்று கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில், ``உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அவர்களது வாக்குகள் எதுவும் எங்கள் அணிக்கு வரப்போவதில்லை. எனவேதான் காங்கிரஸை நாங்கள் கூட்டணியில் சேர்க்கவில்லை" என்று அதிரடியாகத் தெரிவித்தனர். 

அகிலேஷ் யாதவ் - மாயாவதி

கூட்டணியிலிருந்து கழற்றிவிடப்பட்டதால் காங்கிரஸ் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் அவசர அவசரமாக மாநிலக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய அவர், ``பா.ஜ.க-வுக்கு எதிராக அணைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆனால், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எங்களைக் கூட்டணியிலிருந்து வெளியேற்றிவிட்டனர். இனி தனித்துப் போட்டியிடுவதுதான் ஒரே வாய்ப்பு. உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது என முடிவெடுத்துள்ளோம். நாங்கள் பா.ஜ.க-வை தனியாகவே வீழ்த்துவோம்" என்றார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

இதே கருத்தை பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ``பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைப்பது என்று எடுத்துள்ள முடிவை நான் மதிக்கிறேன். உத்தரப்பிரதேசத்தில் கட்சியை வலுப்படுத்தி முழுவேகத்துடன் மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க