`ஆபரேஷன் லோட்டஸ்!’ - கர்நாடக அரசியலில் திடீர் குழப்பம் | Horse trading is going on in the state Karnataka minister DK Shivakumar says

வெளியிடப்பட்ட நேரம்: 10:11 (14/01/2019)

கடைசி தொடர்பு:11:12 (14/01/2019)

`ஆபரேஷன் லோட்டஸ்!’ - கர்நாடக அரசியலில் திடீர் குழப்பம்

கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க சதி செய்வதாக அம்மாநில அமைச்சர் சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். 

சிவக்குமார்

கர்நாடக மாநிலத்தில் தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்குள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க திட்டம் தீட்டி வருவதாகத் கார்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடகாவில் உள்ள மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மும்பையில் தங்கியுள்ளனர். அவர்களுடன் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சிலரும் சில நிர்வாகிகளும் தங்கியுள்ளனர். ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் இங்கு உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை வாங்குவதில் குதிரைபேரம் நடத்தப்பட்டு வருவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் எம்.எல்.ஏ-க்களுக்கு எவ்வளவு பணம் வழங்க உள்ளனர் என்ற தகவலும் எங்களுக்குக் கிடைத்துள்ளது.

பாஜக

இந்த விவகாரத்தில் முதல்வர் குமாரசாமி சற்று மெத்தனப் போக்குடன் செயல்படுகிறார். பொறுத்திருந்து பார்ப்போம் என்பதே அவரின் பதிலாக உள்ளது. அவர் இடத்தில் நான் இருந்திருந்தால் 24 மணி நேரத்துக்குள் பா.ஜ.க-வின் சதியை ஆதாரத்துடன் வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருப்பேன். பா.ஜ.க-வின் இந்தச் சதி முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநிலக் காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் ஆகியோருக்குத் தெரியும்” எனக் கூறியுள்ளார்.