வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (14/01/2019)

கடைசி தொடர்பு:17:30 (14/01/2019)

பிரதமருக்காக வெட்டப்பட்ட 1000 மரங்கள்? -ஒடிஷாவில் புதிய சர்ச்சை

ஒடிஷாவில், பிரதமர் மோடிக்காக தற்காலிக ஹெலிபேட் அமைக்க, சுமார் 1000 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக அம்மாநில வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

மோடி

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நாளை ஒடிஷா மாநிலத்துக்குச் செல்ல உள்ளார். அங்கு, அவர் நிறைய நலத்திட்ட பணிகளைத் தொடங்கிவைக்க உள்ளார். மேலும், அம்மாநிலத்தில் உள்ள பாலிங்கிர் என்ற மாவட்டத்துக்குச் செல்லும் பிரதமர், குர்தா- பாலிங்கர் இடையிலான ரயில் சேவையைத் தொடங்கிவைத்து, பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

இதனால் மோடியின் ஹெலிகாப்டர் வந்து இறங்குவதற்கு ஏதுவாக, பாலிங்கர் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு நிலத்தில் இருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி, அங்கு தற்காலிக ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில வனத்துறை அதிகாரி சமீர் சத்பதி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.  கடந்த 2016-ம் ஆண்டு, ரயில்வே துறை சார்பில் வளர்க்கப்பட்ட மரங்களே தற்போது வெட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மரங்கள்

File Photo

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “ பிரதமர் மோடியின் வருகையைக் கண்டு அச்சப்படும் சிலரே, இதுபோன்ற பொய்யான தகவல்களைப் பரப்பிவருகின்றனர். ஆனால், உண்மையில் மரங்கள் எதுவும் வெட்டப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் ஒடிஷா அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.