கானி இன மக்கள் எதிர்ப்பு - அகஸ்தியர் கூடம் மலை ஏறினார் முதல் பெண்! | Woman To Trek To Kerala Peak After Court Lifts Ban

வெளியிடப்பட்ட நேரம்: 00:52 (15/01/2019)

கடைசி தொடர்பு:00:52 (15/01/2019)

கானி இன மக்கள் எதிர்ப்பு - அகஸ்தியர் கூடம் மலை ஏறினார் முதல் பெண்!

பெண்கள் நுழைய முடியாத பகுதியில் அகஸ்திய முனி குடியிருக்கிறார். தமிழகப் பகுதியில் இருந்து அகஸ்தியர் கூடத்துக்குச் செல்ல அனுமதியில்லை. கேரள அரசின் அனுமதி வாங்கி திருவனந்தபுரத்திலிருந்து நெய்யாற்றின்கரை வனச்சரகத்தில் போனக்காடு வழியாகச் செல்ல முடியும்.ஆபத்தான செங்குத்தான பாறைகள் நிறைந்த இந்த  ட்ரெக்கிங் பாதை. 25 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. 6,500 அடி உயரம் ஏறி இறங்க மூன்று நாள்கள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-ம் தேதியிலிருந்து மார்ச் 2-ம் தேதி வரை அகஸ்தியர் கூடத்தில் மலை ஏற அனுமதிக்கப்பட்டுள்ளது. 

அகஸதியர் கூடம் பெண்கள் செல்ல எதிர்ப்பு

இந்த ஆண்டு அகஸ்தியர் கூடத்தில் மலை ஏற 4000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில், 100 பேர் பெண்கள். அகஸ்தியர்கூடத்தில் உள்ள அகஸ்திய முனி பழங்குடியின மக்களான கானி இன மக்களின் காவலராக அறியப்படுகிறார். பிரம்மச்சாரியான அகஸ்தியரை வழிபடப் பெண்களுக்கு அனுமதி இல்லை. சிவராத்திரி தினத்தில் கானி இன ஆண்கள் மட்டுமே இங்கு விழா நடத்தி வழிபடுகிறார்கள். கானி இன பெண்களுக்கும் இங்கு வழிபட அனுமதியில்லை. அகஸ்தியர் கூடத்துக்கு பெண்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை சமீபத்தில் கேரள உயர்நீதிமன்றம் நீக்கியது.

அகஸ்தியர் கூடம் சென்ற பெண்

இதைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் ராணுவச் செய்தி தொடர்பாளராக இருக்கும் தன்யா சனால் என்ற 38 வயது பெண் அகஸ்தியர் கூடத்துக்கு மலை ஏறத் தொடங்கியுள்ளார். தன்யா சனால் மலை ஏற எதிர்ப்பு தெரிவித்து மலையின் அடிவார பகுதியான போனகாட்டில் கானி இனப் பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். எனினும், தன்யா சனாலை அவர்கள் தடுக்கவில்லை. 

இது குறித்து தன்யா சனால் கூறுகையில், 'மக்களின்  உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் நான் அகஸ்தியர்கூடம் செல்லவில்லை.  அகஸ்தியர் சிலை அருகேவும் செல்லப் போவதில்லை. நான் அகஸ்தியர் கூடம் மலை ஏற உடல் அளவிலும் மனதளவிலும் தயாராக உள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க