`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி! | modi slams congress and cpm

வெளியிடப்பட்ட நேரம்: 02:15 (16/01/2019)

கடைசி தொடர்பு:02:15 (16/01/2019)

`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கேரளாவில் இருந்து பிரசாரத்தை தொடங்கியுள்ளார் பிரதமர் மோடி. அந்தவகையில் கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

மோடி

அதில் பேசிய மோடி, கேரள கம்யூனிஸ்ட் அரசையும், காங்கிரசையும் கடுமையாக விமர்சித்தார். அப்போது, ``ஏழைகளைப் புறக்கணிப்பது, மக்களை ஏமாற்றுவதில் நாணயத்தின் இருபக்கங்கள் போல் கம்யூனிஸ்டும், காங்கிரஸும் செயல்படுகிறது. பெயரளவில் மட்டுமே இரு கட்சிகளுக்கும் வேறுபாடு. மற்றபடி ஊழல், சாதி மற்றும் மதவாதத்தில் இரண்டுமே ஒன்றுதான். சபரிமலை விவகாரத்தில் கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் வெட்கக்கேடானது. ஆன்மிகம், மத நம்பிக்கைகளை கம்யூனிஸ்ட் மதிக்காது என்பது நமக்குத் தெரியும். ஆனால் சபரிமலை விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் இவ்வாறு வெட்கக்கேடான வகையில் செயல்படுவார்கள் என யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.

அதேபோல் காங்கிரஸ் கட்சி இந்த விவாகரத்தில் இரட்டை வேடம் போடுகிறார்கள். சபரிமலை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒரு மாதிரியும்,  கேரளாவில் ஒரு மாதிரியும் நடந்துகொள்கிறார்கள். இந்த விவகாரத்தில் ஏதாவது ஒரு முடிவை எடுக்கக் காங்கிரஸ் கூட்டணிக்கு நான் சவால் விடுக்கிறேன். ஆனால் பாஜக இந்த விஷயத்தில் தெளிவாக உள்ளது. கேரள மாநிலத்தின் பரம்பர்யத்தை காப்பதில் பாஜக துணை நிற்கும். ஒவ்வொரு இந்தியனுக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, பொதுப்பிரிவில், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்குச் 10 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது" எனப் பேசினார்.

மோடி

கூட்டத்தை முடித்துக்கொண்டு திருவனந்தபுரம் சென்ற மோடி அங்கு உள்ள பத்மநாபசுவாமி கோயிலில், சுதேசி வழிபாடு திட்டத்தை தொடங்கி வைத்து, பாரம்பரிய உடையில் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார். கோயிலின் பாரம்பரிய முறைப்படி, வேட்டிக் கட்டி, , மேற்சட்டைக்கு பதிலாக வெண் பருத்தி துண்டைப் போர்த்தியபடி, பத்மநாபசுவாமி கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க