கோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்! | First day of kumbh mela

வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (16/01/2019)

கடைசி தொடர்பு:11:27 (16/01/2019)

கோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்!

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நேற்று தொடங்கிய கும்பமேளா நிகழ்ச்சியின் முதல் நாளில் திரிவேணி சங்கமத்தில் சுமார் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர். 

கும்பமேளா

12 வருடங்களுக்கு ஒருமுறை மகாகும்பமேளா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் அலகாபாத்தில் 2013-ம் ஆண்டு மகாகும்பமேளா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அர்த்த கும்பமேளா நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

உத்தரபிரதேசம்

இந்தக் கும்பமேளாவுக்கு உத்தரபிரதேச அரசு சுமார் 4,500 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. தற்காலிகத் தங்குமிடம், தற்காலிகப் பாலம் உணவகங்கள், தற்காலிக மருத்துவமனை, தற்காலிகக் காவல் நிலையம் என 50 நாள்கள் நடைபெறும் இந்த ஆன்மிக விழாவுக்காக அரசு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற மகா கும்பமேளா விழாக்குச் செய்யப்பட்ட செலவை விட இந்த முறை மூன்று மடங்கு அதிகமான செலவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் இது காஸ்டிலியான கும்பமேளாவாகப் பார்க்கப்படுகிறது. 

பக்தர்கள்

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் இணைவதால் `திரிவேணி சங்கமம்' என்று பிரசித்தி பெற்ற அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளாவில் நீராடுவது மிகவும் புண்ணியம் என்று கருதப்படுகிறது. மகர சங்கராந்தி தினத்தில் தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் நேற்று மட்டும் திரிவேணி சங்கமத்தில் சுமார் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடும் குளிரிலும் மக்கள் ஆற்றில் இறங்கிப் புனித நீராடினர். நாடு முழுவதிலுமிருந்து சாதுக்களும் பக்தர்களும் கும்பமேளாவுக்கு வருகை தந்துள்ளனர். 

புனித நீராடுதல்

நேற்று தொடங்கிய கும்பமேளா நிகழ்வு வரும் மார்ச் 4 -ம் தேதி மகா சிவராத்திரி அன்று நிறைவு பெறுகிறது. இந்த 50 நாள்களில் சுமார் 12 கோடி பக்தர்கள் வருவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவைக் காண வெளிநாட்டினர் பலரும் வந்துள்ளனர். ஜெர்மனியிலிருந்து வந்திருந்த ஒருவர், ``இங்குக் கோடிக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை நேரில் காணவும் புகைப்படங்கள் எடுக்கவும் வந்தேன்” என்றார்.