``மற்றுமொரு வரலாற்றுப் பிழை நிகழ்ந்து விட வேண்டாம்!" - ஜனாதிபதிக்கு முன்னாள் நீதிபதி கடிதம்! | Former Justice Kailash Gambhir writes letter to the President regarding collegium recommendations!

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (16/01/2019)

கடைசி தொடர்பு:16:45 (16/01/2019)

``மற்றுமொரு வரலாற்றுப் பிழை நிகழ்ந்து விட வேண்டாம்!" - ஜனாதிபதிக்கு முன்னாள் நீதிபதி கடிதம்!

``250, 300 குடும்பங்கள்தான் இதுநாள் வரை உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதிகளை அனுப்பியுள்ளன" என முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா கூறியுள்ளார்

``மற்றுமொரு வரலாற்றுப் பிழை நிகழ்ந்து விட வேண்டாம்!

னவரி 12, 2018 அன்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்குபேரின் செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பிறகு நீதித்துறை, அதிலும் குறிப்பாக உச்ச நீதிமன்றம், அவ்வப்போது தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறது. சர்ச்சைக்குரிய பதவிக்காலத்தை நிறைவுசெய்து ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்குப் பிறகு ரஞ்சன் கோகாய் அந்தப் பதவியை ஏற்றார்.

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பற்றிப் பொதுவெளியில் அதிகம் குரல் கொடுத்து வந்தவரான ரஞ்சன் கோகாய் மீது அதிகமான எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், செய்தியாளர்கள் சந்திப்பில் முன்வைத்த `எந்தவொரு குற்றச்சாட்டுகளுமே தற்போதுவரை சரி செய்யப்படவில்லை' எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் உடன் இருந்த செல்லமேஸ்வர் உட்படப் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். இதில் சமீபத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருப்பது பணி மூப்பில் மிகவும் இளையவர்களை உச்ச நீதிமன்றத்துக்கு கொலிஜியம் பரிந்துரைத்திருப்பதுதான்.

உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை கொலிஜியம் ஆலோசித்து அரசுக்குப் பரிந்துரைக்கும். பின்னர் அரசு ஒப்புதல் அளித்து ஜனாதிபதி நியமன உத்தரவை அறிவிப்பார். அரசாங்கம் ஏதாவது ஒருவரின் பெயரை கொலிஜியத்திற்குத் திருப்பி அனுப்பலாம். கொலிஜியம் மீண்டும் அவரின் பெயரை பரிந்துரைக்குமாயின் அரசாங்கம் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். தற்போது நீதிபதிகள் நியமன முறை இவ்வாறுதான் நடைபெற்று வருகிறது.

நீதிபதி செல்லமேஸ்வர்

கொலிஜியத்தின் பரிந்துரைகளின் மீது அரசாங்கம் நீண்ட காலம் முடிவெடுக்காமல் தாமதித்து வருவதாகவும் சிலரின் பெயர்களை மட்டும் ஏற்று, சிலரின் பெயர்களை நிராகரிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. நீதித்துறையின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எப்போதும் முயன்று வருவதாகச் சமீபத்தில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். ``தனிப் பெரும்பான்மை உள்ள எந்தவொரு அரசாங்கமும் நீதித்துறையைக் கட்டுப்படுத்த எப்போதும் முயற்சி செய்துதான் வந்திருக்கின்றன" என முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வரும் குறிப்பிட்டிருந்தார். 

ரஃபேல் வழக்கு, சி.பி.ஐ. இயக்குநர் பணியிட மாற்றம் தொடர்பான வழக்கு என அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளைத் தலைமை நீதிபதி கையாண்ட விதத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. உச்ச நீதிமன்ற கொலிஜியம் வெளிப்படைத்தன்மை இன்றி செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கொலிஜியத்தின் முடிவுகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

ஜனவரி மாதம் 10-ம் தேதி வெளியிடப்பட்ட கொலிஜியத்தின் முடிவில் கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தினேஷ் மகேஷ்வரி மற்றும் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோரின் பெயர்களை உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப் பரிந்துரைத்துள்ளது. அகில இந்திய அளவில் பணி மூப்பில் தினேஷ் மகேஸ்வரி 21-வது இடத்திலும், சஞ்சீவ் கண்ணா 33-வது இடத்திலும் உள்ளனர். தகுதிவாய்ந்த பல்வேறு மூத்த நீதிபதிகள் காத்திருக்கிற சூழலில் இளையவர்களைப் பரிந்துரைத்திருப்பது, நீதித்துறை வட்டாரத்துக்குள் பல்வேறு எதிர்ப்புக் குரல்களை எழுப்பியுள்ளது. மத்திய அரசின் ஆணைக்கு இணங்கச் செயல்படுவதாக இதே நீதிபதி தினேஷ் மகேஸ்வரியை முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர் சில மாதங்களுக்கு முன் கடுமையாக விமர்சித்திருந்தார்.

டிசம்பர் மாதம் கூடிய கொலிஜியம், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பிரதீப் நந்திரஜாக் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் ஆகியோரின் பெயர்களைத்தான் பரிந்துரைக்க முடிவு செய்திருந்ததாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் டிசம்பர் மாதம் கொலிஜியம் உறுப்பினர் நீதிபதி மதன் லோகுர் ஓய்வு பெற்றதையடுத்து, நீதிபதி அருண் மிஸ்ரா புதிய கொலிஜியம் உறுப்பினரானார். ``டிசம்பர் 12-ம் தேதி கூடிய கொலிஜியம் சில முடிவுகளை எடுத்திருந்தது. எனினும் தற்போது கொலிஜியத்தில் புதிய உறுப்பினர் இணைந்திருப்பதால், இப்போது கிடைத்துள்ள கூடுதல் தகவல்களையும் வைத்துக் கொண்டு மீண்டும் புதிதாகப் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என 10-ம் தேதி கொலிஜியம் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நீதிபதி கைலாஷ் கம்பீர்

முன்னர் பரிசீலனையில் இருந்த பெயர்கள் முற்றாக நிராகரிக்கப்பட்டு தற்போது புதிதாக இரண்டு இளைய நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருப்பது பல நீதிபதிகளாலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ``ஆறு வாரங்களுக்கு முன்னர் நிராகரிக்கப்பட்டிருந்த தினேஷ் மகேஸ்வரி தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். அப்போது இறுதி செய்யப்பட்டிருந்த பிரதீப் நந்திரஜாக் பெயர் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. ``கொலிஜியம் வெளிப்படைத்தன்மை உடன் நடந்து கொள்ள வேண்டும்" என முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா கூறியுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி கைலாஷ் கம்பீர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், ``கனத்த இதயத்துடன் இந்தக் கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன். கொலிஜியத்தின் சமீபத்திய முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. 32 மூத்த நீதிபதிகளில் தகுதி வாய்ந்தவர்கள் பலரையும் புறந்தள்ளி இளையவர் ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால் ஜனநாயகமும் நீதித்துறையின் சுதந்திரமும் எவ்வாறு நிலைத்திருக்க முடியும்? நீங்கள் இதில் தலையிட்டு நீதித்துறையின் சுதந்திரத்தையும் நம்பகத்தன்மையையும் பாதுகாத்து, மற்றுமொரு வரலாற்றுப் பிழை நிகழ்ந்துவிடாமல் காத்திட வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பரிந்துரையில் உள்ள சஞ்சீவ் கண்ணா நெருக்கடி காலத்தில் இந்திரா காந்தி அரசாங்கத்தை எதிர்த்து நின்ற புகழ்பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஹெச்.ஆர். கண்ணாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. ``250, 300 குடும்பங்கள்தான் இதுநாள் வரை உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதிகளை அனுப்பியுள்ளன" என முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா குறிப்பிட்டுள்ளதை இங்கு நினைவு கூற வேண்டியுள்ளது.


டிரெண்டிங் @ விகடன்