`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்! | Swiggy delivery boys, vandalized hotel

வெளியிடப்பட்ட நேரம்: 06:40 (17/01/2019)

கடைசி தொடர்பு:10:06 (17/01/2019)

`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்!

பெங்களூருவில் கமிஷனைக் குறைத்ததால் ஸ்விக்கி பாய்ஸ் ஹோட்டலை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்விக்கி

இணையத்தில் உணவுப் பொருள்களை ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் அதிகரித்துள்ளது. இதனால், ஸ்விக்கி, ஜொமாட்டோ, உபேர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. ஆர்டர் செய்த 30 நிமிடங்களுக்குள் உணவு விநியோகிக்கப்பட்டு விட வேண்டும். அதிக வாடிக்கையாளர்களைப் பெறுவதற்காக ஹோட்டல்களும் உணவுப் பொருள்களை சப்ளை செய்யும் டெலிவரி நிறுவனங்களுக்கு கமிஷன் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

பெங்களூரு பன்னராகட்டா சாலையில் உள்ள எம்பயர் ரெஸ்டாரன்ட் செயல்பட்டு வருகிறது. இங்குப் பணி புரிந்து வரும் ஃபாருக் என்பவருக்கும் ஸ்விக்கி டெலிவரி பாய் நதீம் என்பவருக்கும் கமிஷன் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. முதலில் ரூ.40 கமிஷன் தருவதாக ஃபாருக் கூறியுள்ளார். பின்னர், வாடிக்கையாளரிடமிருந்து நல்ல பதில் வந்தால் மட்டுமே ரூ.40 தருவதாகக் கூறி ரூ.10- ஐ குறைத்து ரூ.30 கொடுத்துள்ளார். இதன் காரணமாக இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிக் கைகலப்பில் முடிந்தது. ஹோட்டல் ஊழியர்கள் 7 பேர் சேர்ந்து நதீமை தாக்கியுள்ளனர். தான் தாக்கப்பட்டது குறித்து மற்ற  டெலிவரி பாய்ஸ்களுக்கு நதீம் தகவல் அளித்துள்ளார். ஹோட்டலில் வந்து குவிந்த டெலிவரி பாய்ஸ் தகராற்றில் ஈடுபட்டனர். பின்னர், ஹோட்டலையும் அடித்து நொறுக்கினர். ஹோட்டலில் இருந்த கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. ஹோட்டலில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.

ஸ்விக்கி

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் ஸ்விக்கி பாய்ஸ் 24 பேரை கைது செய்தனர். இதுகுறித்து பேசிய பெங்களூரு துணை கமிஷனர் போரிலிங்கையா, `ஹோட்டல் ஊழியர்கள் 7 பேரும் ஸ்விக்கி பாய்ஸ் 24 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். யார் மீதும் கிரிமினல் ரிக்கார்டு இல்லை. விசாரணை நடந்து வருகிறது ' என்று தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க