`மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு அளித்த நர்ஸ்' - கேரளப் பெரு வெள்ளத்தில் மலர்ந்த காதல்! | nurse becomes life partner to differently abled man at flood relief camp

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (17/01/2019)

கடைசி தொடர்பு:09:42 (17/01/2019)

`மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு அளித்த நர்ஸ்' - கேரளப் பெரு வெள்ளத்தில் மலர்ந்த காதல்!

நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் கொட்டித்தீர்த்த பெரு மழையால், ஒட்டுமொத்த மாநிலமும் வெள்ளத்தில் மூழ்கியதுடன், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஒட்டுமொத்த மக்களும் நிலைகுலைந்துபோனார்கள். பெரு மழையால் வீடுகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் 488 பேர் உயிரிழந்தனர். இந்தப் பெருவெள்ளம், பல்வேறு சோகக் கதைகளையும், நம்பிக்கை கதைகளையும், மனிதாபிமான கதைகளையும் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. இப்போது அதோடு ஒரு காதல் கதையும் சேர்ந்திருக்கிறது. ஆம், வெள்ளத்தின் போது சந்தித்துக்கொண்ட இருவர் தற்போது காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

கேரள பெரு வெள்ளம்

திருச்சூர் அருகே உள்ள ஒல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜிஜோ. தென்னை மரம் ஏறும் தொழிலைச் செய்துவந்த இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்ததில் காலில் பலத்த அடிபட்டதால், வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார். இதனால் வீல் சேரில் அமர்ந்தபடியே லாட்டரிச் சீட்டு விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். ஆனால் பெரு வெள்ளம் அவரது வாழ்க்கையை மீண்டும் புரட்டிப்போட்டது. வெள்ளத்தில் ஜிஜோவின் வீடு உட்பட அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டது. தாயுடன் வீடு இல்லாமல் தவித்தவர் வெட்டுக்காட்டில் உள்ள நிவாரண முகாமில் தஞ்சமடைந்தார். அந்த நிவாரண முகாமுக்குச் செஞ்சிலுவை சங்கத்தில் நர்ஸாகப் பணிபுரியும் ஷீஜா உதவிகள் புரிவதற்காக வந்துள்ளார். அப்போது இருவரும் நண்பர்களாகப் பழகியுள்ளனர். 

காதல் கல்யாணம் செய்த ஜிஜோ - ஷீஜா

photo & news credit : mathrubhumi

ஷீஜா மீது காதல் வர அதனை அவரிடம் கூறியுள்ளார் ஜிஜோ. ஷீஜாவும் சம்மதிக்க நிவாரண முகாமிலேயே காதல் மலர்ந்துள்ளது. இதற்கிடையே, நேற்று முன்தினம் இருவரும் வெட்டுக்காட்டில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர். தந்தை இல்லாமல் தாயுடன் வசித்து வரும் ஜிஜோ வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீட்டைச் சரி செய்ய முடியாமல் ஆறு மாதமாக நிவாரண முகாமிலேயே தங்கியுள்ளார். தற்போது திருமணம் முடிந்த பின்பும் நிவாரண முகாமிலேயே தங்கி வருகிறார். அதேநேரம் வெள்ளத்தில் அவரது வீல் சேரும் சேதமடைந்துள்ளதால் மற்றவர்களின் உதவியை எதிர்நோக்கி இருக்கிறார். தனக்கு யாராவது உதவுவார்கள் என நம்பிக்கையுடன் புது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் ஜிஜோ.

நீங்க எப்படி பீல் பண்றீங்க