15 பேரில் ஒருவரின் உடல் மட்டுமே கிடைத்தது! - மேகாலயா சுரங்கத்தில் ஒருமாதமாகத் தொடரும் தேடுதல் | Navy recovers body from Meghalaya mine where 15 men are trapped since Dec 13

வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (17/01/2019)

கடைசி தொடர்பு:11:32 (17/01/2019)

15 பேரில் ஒருவரின் உடல் மட்டுமே கிடைத்தது! - மேகாலயா சுரங்கத்தில் ஒருமாதமாகத் தொடரும் தேடுதல்

மேகாலயா சுரங்கத்தில் சிக்கிய 15 தொழிலாளர்களில் ஒருவரின் உடலை ஏறக்குறைய ஒரு மாதத்துக்குப் பின் கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மேகாலயா சுரங்கம்

மேகாலயாவில் ஜைண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்துக்குள் வேலைக்காகக் கடந்த 13-ம் தேதி 15 தொழிலாளர்கள் சென்றுள்ளனர். சுரங்கத்துக்கு அருகே ஓடும் லைடெயின் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றில் உள்ள தண்ணீர் சுரங்கத்துக்குள் புகுந்துள்ளது. 370 அடி ஆழமுள்ள சுரங்கத்தில் 70 அடி தண்ணீர் இருப்பதால், உள்ளே சென்ற தொழிலாளர்கள் வெளியில் வர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

மேகாலயா சுரங்கம்

கடந்த ஒரு மாத காலமாக உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை ஒருவர்கூட மீட்கப்படவில்லை. உள்ளே தொழிலாளர்கள் எங்கு உள்ளனர். அவர்களின் நிலை என்ன போன்ற எந்தத் தகவலும் இதுவரை தெரியவில்லை. அவர்களின் உடல்களைத் தேடும் பணியில் கடற்படை நீச்சல் வீரர்கள், தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

மேகாலயா சுரங்கம்


இந்தநிலையில், சுரங்கத்தில் 60 அடி ஆழத்தில் தொழிலாளி ஒருவரின் உடலைக் கடற்படை நீச்சல் வீரர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். குறுகலான அந்தச் சுரங்கத்தின் வாய்ப்பகுதிக்கு அந்தத் தொழிலாளியின் உடல் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் அவரது உடல் சுரங்கத்துக்கு வெளியே எடுக்கப்படும் எனவும் கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
சுரங்கத்தில் தொழிலாளிகள் சிக்கிய விவகாரத்தில் மேகாலயா அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்ததாக உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் கண்டித்திருந்தது. இந்தநிலையில், தொழிலாளி ஒருவரின் உடல் கண்டிபிடிக்கப்பட்டிருக்கிறது.