கேரளாவில் வெற்றிக் கொடிகட்டும் இ-பஸ் சேவை! -முதல்வர் பினராயி பெருமிதம் | kerala government introduces e-bus service for sabarimala

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (17/01/2019)

கடைசி தொடர்பு:16:20 (17/01/2019)

கேரளாவில் வெற்றிக் கொடிகட்டும் இ-பஸ் சேவை! -முதல்வர் பினராயி பெருமிதம்

கேரளாவில் திருவனந்தபுரம்-சபரிமலை இடையே சோதனை அடிப்படையில் இயக்கப்பட்ட இ-பஸ் சேவை வெற்றிபெற்றுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். 

இ பஸ் சேவை

நாட்டின் எரிபொருள் தேவையை மிச்சப்படுத்தும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் வகையில்  எலெக்ட்ரானிக் பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே, ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் குளுமணாலி- ரோட்டாங் கணவாய் சாலையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. மலைப்பாதையில் வெற்றிகரமாக அவை இயங்குவதால், அதே போன்ற பேருந்துகளை இயக்க கேரள மாநில அரசு முடிவுசெய்தது.

அதன்படி கேரள மாநிலப் போக்குவரத்துக் கழகம் சார்பாக `இ-பஸ் கே7’ என்ற பேருந்துகள், 10 வருட ஒப்பந்தத்தில் வாங்கப்பட்டன. 9 மீட்டர் நீளத்தில் டிரைவருடன் சேர்த்து 33 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தப் பேருந்து, 2 முதல் 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் 250 கி.மீ தூரம் பயணம்செய்யும் வகையில் லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகளை சோதனை முறையில் இயக்க கேரள மாநில போக்குவரத்துத் துறை முடிவுசெய்தது. 

அதனால் ஐயப்ப சீசன் காலத்தில் திருவனந்தபுரத்திலிருந்து சபரிமலைக்கு பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட்டது. குளுகுளு வசதியுடன் கூடிய இந்தப் பேருந்துகள் சிக்கலான மலைப் பாதையில் வெற்றிகரமாகப் பயணித்துள்ளது. வழக்கமான பேருந்துகளுக்கு 1 கி.மீ தூரத்துக்குச் சராசரியாக 31 ரூபாய் செலவாகும் நிலையில் இந்த மின்சாரப் பேருந்துகளுக்கு, கிலோ மீட்டருக்கு ரூ.6 மட்டுமே செலவாவது தெரியவந்திருக்கிறது. 

முதல்வர் அறிக்கை

புகை இல்லாததால் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இந்தப் பேருந்துகள் வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``சபரிமலை சீசனுக்கு பக்தர்களின் வசதிக்காக சோதனை முறையில் இயக்கப்பட்ட இ-பஸ் சேவை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தப் பேருந்துகள், ஒவ்வொருநாளும் சராசரியாக 360 கி.மீ தூரம் பயணம்செய்துள்ளன.

இந்தப் பேருந்துகள், 1 கி.மீ தூரத்துக்கு ரூ.110 வருவாய் ஈட்டியுள்ளன. அதன்மூலம், கி.மீட்டருக்கு ரூ.57 கேரள போக்குவரத்துக் கழகத்துக்கு லாபமாகக் கிடைத்திருக்கிறது. கேரள அரசு, இ-வாகனத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து இருப்பதால், மாநில அரசு சார்பாகச் செயல்படும் கேரள ஆட்டோமொபைல்ஸ் சார்பாக எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாக்களை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.