குமாரசாமி ஆட்சி தப்புமா? - கர்நாடக சட்டமன்றத்தில் நடக்கபோகும் க்ளைமாக்ஸ் | Will Kumaraswamy rule escape ...? Tomorrow Karnataka legislature climax!

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (17/01/2019)

கடைசி தொடர்பு:17:00 (17/01/2019)

குமாரசாமி ஆட்சி தப்புமா? - கர்நாடக சட்டமன்றத்தில் நடக்கபோகும் க்ளைமாக்ஸ்

கர்நாடகாவில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தளம் (ம.ஜ.த) கூட்டணி ஆட்சி அமைத்தது. மதச் சார்பற்ற ஜனதா தள குமாரசாமி முதல்வராகப் பதவியேற்றார். 

இந்தக் கூட்டணி ஆட்சி அமைந்ததும், அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் பலர் போர்கொடி உயர்த்திவந்தனர். இதைச் சமாளிக்க, முதல்வர் குமாரசாமி 2-வது முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்தார். அப்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ் ஜார்கிஹோளி மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ சங்கரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதில், இருவரும் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

அதிருப்தி எம்எல்ஏ-க்கள்

இந்தச் சமயத்தில்தான், சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் சங்கரும், நாகேஷும், ‘காங்கிரஸ், ம.ஜ.த இடையே ஒற்றுமை இல்லை. இதனால், கர்நாடக மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்று கூறி, தங்களின் ஆதரவை பா.ஜ.க-வுக்கு அளிப்பதாக கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவிடம் கடிதம் கொடுத்து வெளியேறினர். 

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், காங்கிரஸ் ஜெடிஎஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க, ''மும்பையில் உள்ள தனியார் விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பீமா நாயக், நாகேந்திரா, உமேஷ் யாதவ் ஆகிய 3 பேரையும் பா.ஜ.க தலைவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களைத் தவிர ரமேஷ் ஜார்கிஹோளி, அஜய் சிங், பிரதாப் கௌடா பாட்டீல், பி.சி. பாட்டீல், கணேஷ், ஆனந்த் சிங் ஆகியோரிடம், அரசைக் கவிழ்க்க குதிரைப் பேரம் நடத்திவருவதாகக் குற்றம் சாட்டினார்.

குமாரசாமி

இப்படியொரு சிக்கலைச் சமாளிக்க, காங்கிரஸ் தலைமை தங்களது கொறடா மூலம் (நாளை) ஜனவரி 18-ம் தேதி கர்நாடக சட்டமன்றத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று தங்கள் எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால், மும்பையில் தங்கியுள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தில் கலந்துகொள்ள வேண்டும். அப்படி இல்லை ஏன்றால், அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிபோகும் என்ற நெருக்கடி சூழலை ஏற்படுத்தியுள்ளனர்.

பா.ஜ.க தலைவர் எடியூரப்பாவோ, ‘கர்நாடக அரசியலில் குழப்பமான நிலை நீடித்துவருகிறது. எங்கள் கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டியுள்ளது. எனவே, நாங்கள் தனித்து இருக்கிறோம். நாங்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுடன் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை'' என்று மறுத்துள்ளார்.

எடியூரப்பா

கர்நாடகாவில் தற்போது, பா.ஜ.க-வுக்கு 2 சுயேச்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் 106 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க இன்னும் 8 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு பா.ஜ.க-வுக்கு தேவை. ஒன்று காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை தங்களுக்கு ஆதரவாக வளைக்க வேண்டும். இல்லை, காங்கிரஸின் பெரும்பகுதி எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்யவைக்க வேண்டும். பா.ஜ.க-வின் இந்த மாஸ்டர் பிளான் சக்சஸ் ஆகுமா என்பது நாளை கர்நாடக சட்டமன்றத்தில் தெரிந்துவிடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.