மம்தா பானர்ஜி அழைப்பை ஏற்ற ஸ்டாலின்! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி | Stalin attending TMC mega rally in kolkata

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (17/01/2019)

கடைசி தொடர்பு:18:20 (17/01/2019)

மம்தா பானர்ஜி அழைப்பை ஏற்ற ஸ்டாலின்! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

த்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி-யின் ஆட்சிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், கடந்த  நான்கரை ஆண்டுகளில் மத்திய அரசு தன் ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட திட்டங்களைக் கண்டித்து பி.ஜே.பி இல்லாத ஆட்சியை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொண்டுவருவோம் என எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும் முயற்சியில்  காங்கிரஸ் இறங்கியது. கடந்த டிசம்பர் 10-ம் தேதி, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், இடதுசாரிகள், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

ஸ்டாலின், ராகுல் காந்தி

இந்நிலையில், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள  பி.ஜே.பி-க்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைத்து பேரணியை கொல்கத்தாவில் அறிவித்துள்ளார். அந்தப் பேரணியில் பங்கேற்க சோனியா காந்தி, ராகுல் காந்தி , தேவ கவுடா உள்ளிட்ட பல கட்சித் தலைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், சென்னை  அண்ணா அறிவாலயத்தில் நடந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  ஆனால், அந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை கட்சித் தலைவர் டெரிக் ஓ பிரையன் பங்கேற்றிருந்தார்.  சிலை திறப்பு நிகழ்ச்சியில் பேசிய  ஸ்டாலின், ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என முன் மொழிந்தார். தேசிய அளவில் உள்ள பல தலைவர்களும் இதுபற்றி பேசாத நிலையில், ஸ்டாலினின் இந்தக் கருத்து தேசிய அளவில் விவாதிக்கப்பட்டிருந்தது.  இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த மம்தா பானர்ஜி,   “யார் பிரதமர் வேட்பாளர் என கருத்து தெரிவிக்க இது பொருத்தமான நேரமில்லை. யார் பிரதமர் வேட்பாளர் என்பதைத் தனி நபர்களும், கட்சிகளும் மட்டுமே முடிவு செய்துவிட முடியாது” என்று தெரிவித்திருந்தார்.

மம்தா பானர்ஜி

இந்நிலையில், கொல்கத்தாவில் நடக்கும் பேரணிக்கு முறைப்படி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதாக முறைப்படி எந்த அறிவிப்பும் வரவில்லை. கூட்டணி சர்ச்சைகளைக் கருத்தில்கொண்டு, பங்கேற்பை ஸ்டாலின் தவிர்ப்பதாக அரசியல் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ஜனவரி 19-ம் தேதி நடைபெறும் பேரணியில், ஸ்டாலின் பங்கேற்பதற்கான அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன. சமீபத்தில் காங்கிரஸ் , பி.ஜே.பி இல்லாத மூன்றாம் அணியைக் கட்டமைப்போம் என  தெலங்கான முதல்வர் சந்திரசேகர ராவ், கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.