‘கூலிங்கிளாஸைக்கூட விட்டுவைக்கவில்லை; 15 நிமிடம் பக்கா ப்ளான்’ - சினிமாவை விஞ்சிய டுரோன்டோ ரயில் கொள்ளை | Jammu Delhi Duronto Express Passengers belongings looted by robbers

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (17/01/2019)

கடைசி தொடர்பு:20:11 (17/01/2019)

‘கூலிங்கிளாஸைக்கூட விட்டுவைக்கவில்லை; 15 நிமிடம் பக்கா ப்ளான்’ - சினிமாவை விஞ்சிய டுரோன்டோ ரயில் கொள்ளை

'தி ஃபாஸ்ட் அண்ட்  ஃப்யூரியஸ்' படத்தில், ரயிலில் பிளான் பண்ணி திருடுவது போல, டெல்லிக்கு அருகே  ஒரு கும்பல், ரயிலில் வந்த பயணிகளை மிரட்டி பொருள்களை வழிப்பறி செய்துள்ளது. பணம், நகைகள், ஏடிஎம் கார்டு, சன் கிளாஸ் முதற்கொண்டு 15 நிமிடத்தில் கச்சிதமாக சினிமாவுக்குகே டஃப் கொடுக்கும் அளவுக்கு திருடிவிட்டு தப்பியுள்ளார்கள்.

ஜம்மு-விலிருந்து டெல்லி நோக்கி சென்றுகொண்டிருந்த 'டொரோண்டோ எக்ஸ்பிரஸின்'  இரண்டு குளிர்சாதனப் பெட்டியில், இன்று அதிகாலை இச்சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து அப்பெட்டியில் பயணம்செய்த அஸ்வினி குமார் என்பவர் ரயில்வேக்கு அளித்த புகாரில்,  ''திடீரென்று 7-லிருந்து 10 வரை முகம் தெரியாத நபர்கள் B3 மற்றும் B7 பெட்டியில் நுழைந்தனர். அவர்கள் அனைவரும் கூர்மையான கத்தியைப் பயணிகளின் கழுத்தில் வைத்து, அனைத்து பொருள்களையும் கொடுத்துவிடுமாறு மிரட்டினர். ஒரு 10 -லிருந்து 15 நிமிடத்திற்குள் பர்ஸ்,பணம்,கேரி பேக்ஸ்,தங்க நகைகள்,மொபைல் எனப் பலவற்றைப் பயணிகளிடமிருந்து பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்'' என்றார்.

இதுகுறித்து மேலும் கூறியவர், 'ரயிலில் இருந்த பணியாட்கள், பாதுகாப்பாளர்களை எங்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. பிறகு பார்த்தபோது, அவர்களுக்கான இடத்தில் இல்லாமல் வேறு எங்கேயோ தூங்கிக்கொண்டிருந்தனர்' என்றார். 'சரை ரொஹிலா' நிலையத்தின் வருகைக்கு முன், இடையில் சிக்னல் காரணமாக ரயில் நின்றுள்ளது. இதன் காரணமாக, இடைப்பட்ட நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது என்கிறது ரயில்வே பாதுகாப்புப் படை (RPF). மேலும்,'இந்த ரயிலில் முறையான பாதுகாப்பாளார்கள் இல்லை. இதனால், பணியாளர்களான எங்களுக்கே தொடர் அச்சுறுத்தல் நிகழ்கிறது' என்று  அவர்கள் குற்றம் சாட்டினர்.

'பயணிகளிடம் முறையான விசாரணை மேற்கொண்டு, சந்தேகத்திற்குரியவர்களை அடையாளம் காண்போம்' என்றுள்ளது ரயில்வே பாதுகாப்புப் படை.  முதல் கட்ட விசாரணைகள் நடந்துவருகிறது. விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் எனக் கூறுகிறது, வடக்கு ரயில்வேயின் மக்கள் தொடர்பு அலுவலகம்.