மக்களவைத் தேர்தல் குறித்து புரளி! - விசாரணைக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம் | Election Commission Directs Probe Into Fake News Of 2019 Poll Schedule

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (18/01/2019)

கடைசி தொடர்பு:09:36 (18/01/2019)

மக்களவைத் தேர்தல் குறித்து புரளி! - விசாரணைக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெறும் தேதிகள் குறித்து இதுவரை அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை. இந்தநிலையில், தேர்தல் தேதிகள் வெளியாகிவிட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு டெல்லித் தலைமைத் தேர்தல் ஆணையருக்குத் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. 

தேர்தல் ஆணையம்

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, மக்களவைத் தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்கள் மக்களைக் குழப்பும் என்பதால், அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. இதுதொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்களுக்குத் தேர்தல் ஆணையம் சில அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது. 

வாக்குப் பதிவு இயந்திரம்

இந்தநிலையில், 2019 ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தேதி குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரவின. இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையருக்குத் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, டெல்லி போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, பொய்யான தகவல்களைப் பரப்பியவர்கள் குறித்த விசாரணையில் டெல்லிக் காவல்துறை களமிறங்கியிருக்கிறது.