சி.பி.ஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உட்பட 4 பேர் திடீர் நீக்கம்! - மத்திய அரசு உத்தரவு | Govt curtails tenure of CBI’s Rakesh Asthana, three other officers

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (18/01/2019)

கடைசி தொடர்பு:09:35 (18/01/2019)

சி.பி.ஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உட்பட 4 பேர் திடீர் நீக்கம்! - மத்திய அரசு உத்தரவு

ஊழல் சர்ச்சையில் சிக்கிய சி.பி.ஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்ளிட்ட 4 பேரை பதவியிலிருந்து நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

ராகேஷ் அஸ்தானா

சி.பி.ஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறிய விவகாரம் கடந்த அக்டோபரில் விஸ்வரூபமெடுத்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது. அதேபோல், அலோக் வர்மாவுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களையும் மத்திய அரசு பறித்தது. மேலும், மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி நாகேஸ்வர ராவை சி.பி.ஐ-யின் இடைக்கால இயக்குநராகவும் நியமித்தது. 

அலோக் வர்மா

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அலோக் வர்மாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது. இதையடுத்து மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட அலோக் வர்மாவை, தீயணைப்புத் துறைத் தலைவராக இடமாற்றம் செய்தது மத்திய அரசு. நாகேஸ்வர ராவை இடைக்கால இயக்குநராக மத்திய அரசு நியமனம் செய்தது. இதனால், அதிருப்தியடைந்த அலோக் வர்மா பணி ஓய்வுபெற 21 நாள்களே இருந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்தார்.  

இந்தநிலையில், ஊழல் புகாரில் சிக்கிய ராகேஷ் அஸ்தானாவைப் பதவியிலிருந்து நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. அவருடன் சி.பி.ஐ இணை இயக்குநர் அருண்குமார் ஷர்மா, டி.ஐ.ஜி மணீஷ்குமார் சின்ஹா, எஸ்.பி. ஜெயந்த் ஜே நயக்நவாரே ஆகியோரையும் பணிநீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.