தமிழகத்திலிருந்து 24 பேர் உட்பட 51 பெண்கள் சபரிமலையில் தரிசனம்! உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு | SC orders to give adequate security to Bindhu and kanaga Durga over Sabarimala issue

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (18/01/2019)

கடைசி தொடர்பு:13:40 (18/01/2019)

தமிழகத்திலிருந்து 24 பேர் உட்பட 51 பெண்கள் சபரிமலையில் தரிசனம்! உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு

சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் வழிபட அனுமதி அளித்து உத்தரவிட்ட பிறகு, இதுவரை 51 பெண்கள் சுவாமி தரிசனம் செய்திருப்பதாக கேரள அரசு தெரிவித்திருக்கிறது. 

சபரிமலையில் தரிசனம் செய்த  பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுவரையுள்ள பெண்களுக்கு வழிபடும் உரிமை இருக்கிறது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த இந்து அமைப்புகள் சபரிமலைக்குப் பெண்கள் செல்லுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல், சபரிமலை வரும் பெண்களுக்கு எதிராக சரண கோஷப் போராட்டமும் நடத்தப்பட்டது. அதேநேரம், சபரிமலை செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்தது. இந்தநிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகிய இரு பெண்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இருவருமே ஐம்பது வயதுக்குக் குறைவானவர்கள். 

சபரிமலையில் தரிசனம் செய்த பிந்து, கனக துர்கா

சபரிமலை சென்று திரும்பியதால், தங்களுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாகக் கூறி கனகதுர்கா மற்றும் பிந்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள், தங்கள் மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கனக துர்கா, பிந்து ஆகிய இருவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க கேரள போலீஸாருக்கு உத்தரவிட்டனர். 

சபரிமலை


இந்த வழக்கு தொடர்பான வாதத்தின் போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் இதுவரை 51 பெண்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ததாக கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. கேரள அரசு தாக்கல் செய்த 51 பேரின் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெண்களில் 24 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.